நானும் சுந்தர்.சியும் 15 ஆண்டுகள் இணையாததற்கு இதுதான் காரணம்: வடிவேலு
கேங்கர்ஸ் படம் குறித்து நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.
மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கியுள்ள திரைப்படம் கேங்கர்ஸ்.
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக சுந்தர். சி, நாயகியாக கேத்ரீன் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏப். 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்வு நேற்று (ஏப்.16) சென்னையில் நடைபெற்றது. இதில், சுந்தர்.சி, வடிவேலு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய வடிவேலு, “நானும் சுந்தர்.சியும் வின்னர் திரைப்படத்திற்குப் பின் கேங்கர்ஸ் படத்தில் மீண்டும் இணைந்துள்ளோம். இடைப்பட்ட 15 ஆண்டுகளில் நாங்கள் பணியாற்றவில்லை. அதற்கு காரணம், பலரும் எங்களைப் பிரிக்க முயற்சி செய்ததுதான்.

நம்மூரில் 4 பேர் சேர்ந்திருந்தால் பலருக்கும் பிடிப்பதில்லை. வில்லத்தனமாக சொல்லாத ஒன்றை இன்னொருவரிடம் சொல்லி பிளவை ஏற்படுத்துகின்றனர். இப்படி பல ஆண்டுகள் நாங்கள் பிரிந்திருந்தோம். ஆனால், பெரிதாகத் தெரியவில்லை. கேங்கர்ஸ் திரைப்படம் குடும்பமாகவே ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. மீம்களை உருவாக்க மிகச்சரியான படம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: சூரியின் அடுத்த பட அப்டேட்!