செய்திகள் :

`குளோபல் ஜாப் மார்க்கெட்; எனது கனவு’ - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதென்ன?

post image

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

"'போதும்' என நினைக்கக் கூடாது"

இதில் பேசிய அவர், "உயர்கல்வியில் தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் 51.3%. இது தேசிய சேர்க்கை விகிதத்தை விட இருமடங்கு அதிகம்.

நாம் தேசிய கல்விக்கொள்கையை நிராகரித்துள்ளோம். அதை செயல்படுத்தினால் அடையலாம் என அவர்கள் சொல்லும் இலக்கான 50 விழுக்காட்டை நம் திராவிடமாடல் ஆட்சியில் இப்போதே தாண்டிவிட்டோம்.

500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் 31 புகழ்பெற்ற உயர்கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. NIRF தரவரிசையின் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ள 22 பல்கலைக்கழங்களுடன் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. தரமான கல்வியுடன் நாம் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுபோதும் என்று நாம் மனநிறைவடைந்துவிடக் கூடாது.

Education
Education

பெரிய கனவுகளைக் காணவும், புதுமைகளை உருவாக்கவும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தவும் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

அறிவியல் தொழில்நுட்பங்களில், உலகம் வேகமாக மாறி வருகிறது என்று கல்வியாளர்களாகிய உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் நம்முடைய பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும். நம்முடைய பல்கலைக்கழகங்களில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வது, புதிய உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைகளை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

மூன்று தூண்கள்!

நாம் உருவாக்கப்போகும் மாற்றங்களின் பயன் நம்முடைய மாணவச் செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கான எதிர்காலத் திட்டத்தை உருவாக்க நாம் ஒன்று கூடியிருக்கும் இந்தக் கூட்டம், ஒரு தொடக்கம்தான். அடுத்தகட்ட ஆலோசனைகளை நாட்டின் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வியில் உள்ள சிறந்த ஆலோசகர்களிடம் மேற்கொள்ளப் போகிறேன்.

உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களும், இந்த முன்னெடுப்பை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் கொண்டு போவார். உயர்கல்வித் துறையில், ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து. புதிய துடிப்பான தமிழ்நாட்டின் அடித்தளமாக மாற்ற, நாம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுத்தவில்லை என்றால், நம்முடைய மாணவர்கள் பின்தங்கிடக்கூடும். அதனால், தாமதமில்லாமல் நாம் உடனடியாக ஈடுபட்டு, அந்த நடவடிக்கைகள் அமையவேண்டும்.

நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்காலத் திட்டம் மூன்று தூண்களை அடிப்படையாக கொண்டது:

1. பொருத்தமான கல்வி

2. வேலைவாய்ப்பு

3. அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை

இந்த மூன்றைப் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்.

Technology

முதலாவதாக, பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறிக்கொண்டு வருகிறது. AI, Green Energy, Industry 4.0 இவையெல்லாம்தான் பொருளாதாரங்களை முடிவு செய்கிறது. நம்முடைய பல்கலைக்கழகங்களும் வளரும் தேவைகளுக்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

  • டேட்டா சயின்ஸ்,

  • ரினிவபுள் எனர்ஜி

  • மேம்பட்ட உற்பத்தி (Advance Manufacturing)

போன்ற புதிய துறைகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். அடிப்படைக் கல்வியறிவை நவீன திறன்களோடு இணைத்து, நம்முடைய மாணவர்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், இன்னோவேட்டிவாக, சொல்யூஷன்ஸ் தருபவர்களாக உருவாக வேண்டும்.

'குளோபல் ஜாப் மார்க்கெட்'-ல் போட்டியிட வேண்டும்

தொழில்துறையினருடன் இணைந்து, உலகின் தேவைகளை பிரதிபலிக்கும் பாடப்பிரிவுகளை வடிவமைத்து, பல்துறை கற்றலை ஊக்குவிக்க வேண்டும். இரண்டாவதாக, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். கல்வி என்பது அறிவைப் பற்றியது மட்டுமல்ல; அது மாணவர்களுடைய திறன்களையும் மேம்படுத்த வேண்டும்.

என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டமானது, இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அதில் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேர் திறன் மேம்பாடு மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். தொழில்துறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை அளிக்கும் இந்தத் திட்டம். நமது இளைஞர்களை 'குளோபல் ஜாப் மார்க்கெட்'-ல் போட்டியிடும் திறன் கொண்டவர்களாக மாற்றியிருக்கிறது. இதை இன்னும் செம்மைப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளை நீங்கள் தெரிவிக்கலாம்.

கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டை வலுப்படுத்தவும், முன்னணி நிறுவளங்களுடன் கூட்டணி அமைக்கவும், பயிற்சி திட்டங்களை விரிவாக்கவும் உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் டிகிரி சர்ட்டிபிகேட்டோடு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

மூன்றாவதாக, இன்க்ளூசிவிட்டி மற்றும் ஈக்விட்டி. தமிழ்நாட்டின் பலம், சமூகநீதியில் நாம் காட்டும் உறுதியில்தான் இருக்கிறது. இது சமூகநீதி, சமநீதியை அடிப்படையாக கொண்ட மாநிலம். எந்த திட்டமாக இருந்தாலும் அதன் அடிநாதமாக இந்தக் கோட்பாடுகள் இருப்பதை பார்க்க முடியும். நம்முடைய திராவிட மாடல் அரசின் தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களால், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது கடந்த மூன்று ஆண்டுகளில் 30 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. ஏனென்றால், இந்தத் திட்டங்கள் பொருளாதாரச் சூழல் நம்முடைய மாணவர்களின் திறமைக்குத் தடை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது.

"கல்வியாளர்கள் செயல்பாட்டாளர்களாகவும் இருக்க வேண்டும்"

இதுபோன்ற திட்டங்களால் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வியை அணுகக் கூடியதாக நாம் மாற்றி இருக்கிறோம். இந்த வரிசையில் மாற்றுத்திறனாளிகளுக்கும். முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் ஆதரவான 'இன்க்ளூசிவ் கேம்பஸ்'-களை உருவாக்குமாறு பல்கலைக்கழகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

துணைவேந்தர்கள், பதிவாளர்களான நீங்கள் அடிப்படையில் கல்வியாளர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பல்வேறு கனவுகளை நிறைவேற்றித் தரும் செயல்பட்டாளர்களாகவும் செயல்பட வேண்டும்.

உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

தொழில் நிறுவனங்களும் அதிகமாகி வருகிறது.

தொழிலாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு பெருகுகிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

2033-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காக வைத்துக்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறேன். இந்த இலக்கை தமிழ்நாடு உறுதியாக அடையும் என்று பிசினஸ் நியூஸ்பேப்பர்ஸ்' தொடர்ந்து எழுதுகிறார்கள்.

கல்விக்கான பொற்காலம்

தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னேறி வருகிறது. இப்படியான காலக்கட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் பணி மிக முக்கியமானது. நீங்கள் வெறும் கல்வி நிர்வாகிகள் மட்டுமல்ல; நீங்கள்தான் இளைஞர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறீர்கள். நம்முடைய இளைஞர்களின் வாழ்க்கையையும், தொழிலையும் உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது.

ஆசிரியர்களுக்கு வழிகாட்டவும், மாணவர்களை உயர் நிலைகளுக்குச் செல்ல ஊக்குவிக்கவும், உங்கள் பல்கலைக்கழகங்களை புதுமையை நோக்கி வழிநடத்தவும் உங்களை அழைக்கிறேன். பாடத்திட்ட வடிவமைப்பு, ஆசிரியர் பயிற்சி அல்லது உள்கட்டமைப்பு மேம்பாடு என்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

மெடிக்கல் டூரிஸத்திற்கு புகழ்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவமனையில் சிகிச்சைப்பெறுவதற்கு மக்கள் வருகிறார்கள். அதுபோல, உலகத்தில் இருக்கின்ற பல நாடுகளில் இருந்தும் நம்முடைய பல்கலைகழகங்களில் கல்வி கற்க மாணவர்கள் வரவேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக நம்முடைய தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் திகழவேண்டும். இதுதான் என் கனவு.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலம், கல்லூரிக் கல்வியின் பொற்காலம் என்பது போல, இந்த திராவிட மாடல் ஆட்சி காலம் உயர் கல்வி ஆராய்ச்சிக் கல்விக்கான பொற்காலமாக வரலாற்றில் பேசப்படவேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை.

புதிய தமிழ்நாட்டை, துடிப்பான தமிழ்நாட்டை, அனைவரையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டை, முன்னோக்கிப் பயணிக்கும் மாநிலத்தை கட்டி எழுப்புவோம். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியைப் பொறுத்தவரை, கல்விக்குத் தான் முக்கியத்துவம் தருவோம். அனைவருக்கும் கல்வி அடிப்படைக் கல்வி ஆராய்ச்சிக் கல்வி கிடைக்க வேண்டும்.

பட்டதாரி
பட்டதாரி

எனவே, தடையற்ற கல்வியை தரமான கல்வியை அனைவரும் தலைநிமிரத் தேவையான கல்வியை நம்முடைய பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். இந்த இலட்சியப் பயணத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உறுதியோடு முன்னேறுவோம். தமிழ்நாட்டின் உயர்கல்வியில் உலகத்தரத்தை உருவாக்குவோம்!" என்று உரையாற்றினார்.

பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் தங்களது பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், சாதனைகள், வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

Tamil Talents Plan

இந்தக் கூட்டத்தின் இறுதியில் உரையாறிய முதலமைச்சர் ஸ்டாலின்,

"துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களாகிய உங்களது கவனத்திற்கு முக்கியமான விஷயங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

உலகெங்கிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளிலும், ஆராய்ச்சிப்பொறுப்புகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். அவர்களில் பலரும் நமது தாய்த் தமிழ்நாட்டிற்கு, நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும், மாநிலத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.

அவர்களது திறமையையும், அறிவையும் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டில் Tamil Talents Plan எனும் திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதன்மூலம் அயல்நாட்டில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களின் பங்களிப்புடன் நமது கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் மேற்கொண்டு வரக்கூடிய பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகளினால் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக அந்நாட்டில் இருக்கும் நம் மாநிலத்தைச் சார்ந்த திறமை வாய்ந்த பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் தாய் நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அத்தருணத்தில் அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், உயர் கல்வி அமைப்புகளிலும் உலகத் தரத்தினைக் கொண்டுவர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிவகைகள் செய்திடவும் நீங்கள் உரிய நடவடிக்கைகளை, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்திட விரும்புகிறேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

"பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ பரப்பிவிடக் கூடாது"

அடுத்து நான் முக்கியமாக ஒன்றை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிடக் கூடாது.

கல்வியின் அடிப்படையே அறிவைச் செம்மைப்படுத்துவதுதான். அறிவியல்ரீதியான உண்மைகளையும், உயர்ந்த மானுடப் பண்புகளையும் போதிப்பதுடன், மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது. இதை மனதிலே கொண்டு உங்கள் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்று பேசினார்.

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க