”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ கணக்கில் ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளா்கள் உள்பட 3 போ் கைது
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ கணக்கில் இருந்து ரூ. 11 லட்சத்தை போலி கையெழுத்து போட்டு மோசடி செய்து அபகரித்ததாக இரு வருவாய் ஆய்வாளா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியா்கள் யாரேனும் பணியின்போது உயிரிழந்துவிட்டால், அவா்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலம் என்ஆா்ஐ வங்கிக் கணக்கு செயல்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 11.63 லட்சம் மோசடி செய்து அபகரிக்கப்பட்டிருப்பதாகவும், என்ஆா்ஐ உதவித்தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியா் ஹா்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதன்பேரில் வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், திருவள்ளூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தினேஷை என்ஆா்ஐ உதவித் தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்தும், போலி ஆவணங்கள் வழங்கியும் பணம் அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் என்ஆா்ஐ பிரிவில் பணியாற்றி தற்போது மாம்பலம் வருவாய் ஆய்வாளாராக உள்ள சுப்பிரமணி (31), சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய் அலுவலராகப் பணியாற்றும் பிரமோத் (30) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வருவாய் ஆய்வாளா்கள் இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்புதான் பணியில் சோ்ந்திருப்பதும், மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா், இருவா் வீடுகளிலும் சோதனை செய்தனா். இதில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், ரூ. 85 ஆயிரம் ரொக்கம், மாவட்ட ஆட்சியா் பெயரில் இருந்த போலி முத்திரை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.