தொடா் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் சென்னை: இன்று டெல்லியுடன் மோதல்
மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்
2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும், பயங்கரங்களும் நடந்தும், இன்னும் பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்கவில்லை.
இவற்றிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னை குறித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது திமுக எம்.பி கனிமொழி...

`உங்களுக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது’
"மக்களவையில் மணிப்பூர் பிரச்னையை குறித்து பேச எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், நீங்கள் இன்று இந்த நடுராத்திரி 2 மணியளவில் அந்தப் பிரச்னையை குறித்து பேச நேரத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.
இதுவே அங்கே கஷ்டப்படும் மணிப்பூர் மக்கள் மீது உங்களுக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது.
இந்தப் பிரச்னை குறித்து பேச நடுராத்திரி 2 மணி சரியான நேரமா? இந்தப் பிரச்னை குறித்து தெளிவாக பேச நாளைக்கு நேரம் கொடுக்கக் கூட நீங்கள் தயாராக இல்லை. இது வருத்தத்திற்குரிய விஷயம்.
ஒரு அம்மாவின் கதை!
மணிப்பூரில் 260-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. 2,000 பேர் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். 5,000 வீடுகள், கோவில்கள், சர்ச்சுகள் நாசமடைந்துள்ளன.
நாங்கள் நேரடியாக கேம்ப்பிற்கு சென்று பார்த்தோம். அங்கே இருந்த ஒரு அம்மா குறித்து பேச விரும்புகிறேன்.
அவர் ஒவ்வொரு நாளும் கேம்ப்பின் நுழைவு வாயிலுக்கு யாராவது வந்தால், 'என் மகன் வந்துவிட்டானா?' என்று ஓடிச்சென்று பார்க்கிறார்.
கடைசியில், அந்த நம்பிக்கை விட்டு, என் மகன் உயிரோடு இருக்கிறானா... இல்லையா என்பதை சொன்னால் கூட போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.
இது ஒரு பெண், ஒரு அம்மாவின் கதை அல்ல. இது மாதிரி ஆயிரம் பெண்கள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இன்னமும் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர ஒன்றும் செய்யவில்லை.

முதலமைச்சரே கலவரத்தை தூண்டினார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இன்னும் அதிக கலவரத்தை தூண்டினார்... ஆதரவு அளித்தார் என்பது கவலைக்குரிய விஷயம்.
ஆயுதங்கள் எப்படி தீவிரவாதிகள் மற்றும் போராட்டக்காரர்கள் கைகளுக்கு சென்றது? இதற்கு யார் காரணம்? இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள்?
இரண்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டது இந்த நாட்டிற்கு அவமானத்தை கொண்டு வந்தது. யார் அந்த களங்கத்திற்கு பதில் சொல்ல போகிறார்கள்? இதற்கு எந்த பதிலும் நம்மிடம் இல்லை.
உள்துறை அமைச்சர் கூறிய பிறகும், அங்கே கலவரங்கள் நடக்கத்தான் செய்தது. 1,300 பேர் காயமடைந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
கல்விக்காக குறைந்த நிதி
ஜனாதிபதி ஆட்சியில் இப்போது என்ன பயன்? 14,000 மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. ஆனால், நீங்கள் அவர்களுக்கான பட்ஜெட்டை குறைக்கிறீர்கள்?
மணிப்பூர் கல்விக்காக வெறும் 2.3 சதவிகித நிதி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
உணவு, தண்ணீர் இல்லாத அந்த மக்களுக்கு நீங்கள் பட்ஜெட்டை குறைத்துள்ளீர்கள்.

எங்களுடைய முதலமைச்சர் மணிப்பூரில் அமைதியும், இயல்பு நிலையும் மீண்டும் வேண்டும் என்று கூறியிருக்கிறார். எங்களுக்கு மணிப்பூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வேண்டும்.
எங்களுக்கு அமைதியை கொண்டுவரும் அரசு தான் வேண்டும். மக்களை பிரிவினைப்படுத்த முயலும் உங்கள் அரசு மாதிரியான அரசு அங்கே வேண்டாம்.
பெண்கள் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால், மணிப்பூர் பெண்கள் குறித்து நீங்கள் கண்டுகொள்ளவில்லை. உங்களுக்காவது நீங்கள் நேர்மையாக இருங்கள்" என்று பேசியுள்ளார்.