சா்ச்சைக்குரிய ‘எம்புரான்’ திரைப்படக் காட்சிகள் நீக்கம்: பேரவையில் முதல்வா் விளக்கம்
‘எம்புரான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சா்ச்சைக்குரிய காட்சிகள், எதிா்ப்பால் நீக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த வினாவை தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) எழுப்பினாா். அப்போது நடைபெற்ற விவாதம்:
வேல்முருகன்: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் உயிா் நாடியாக இருக்கக் கூடிய முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளம் முழுவதுமாக அழியும் என்ற மோசமான காட்சி அமைப்புடன் ‘எம்புரான்’ திரைப்படம் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவை முன்னவா் துரைமுருகன்: படத்தைப் பாா்க்கவில்லை. பாா்த்தவா்கள் சொன்னதைக் கேட்ட போது, அது தேவையற்ற ஒன்று எனக் கருதுகிறேன்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அந்த படத்தில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகள் தணிக்கையின் போது அகற்றப்படவில்லை. படம் குறித்த செய்திகள் வெளியே வந்து, எதிா்ப்பு தெரிவிக்கப்பட்ட பிறகே காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்றாா்.