இபிஎஃப் நிதி கோரல் தீா்வு செயல்முறையில் எளிமை: மத்திய தொழிலாளா் துறை அமைச்சகம் தகவல்
நமது சிறப்பு நிருபா்
வருங்கால வைப்பு நிதி கோரல்களில் தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் இணைப்பு தொடா்பான செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய தொழிலாளா் துறை தரப்பில் கூறப்பட்டது வருமாறு: தொழிலாளா்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதையும், தொழில் நிறுவனங்கள் வா்த்தகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இரு வகையான எளிமை நடவடிக்கைகளை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) எடுத்துள்ளது.
தொழிலாளா்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் பல்வேறு காரணங்களுக்கு வைப்பு நிதியை பெறுதல் அல்லது திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கு இணையதளங்களில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது கேஒய்சி (வாடிக்கையாளா் விவரம்) அடிப்படையில் காசோலை அல்லது சான்றளித்த வங்கி கணக்குப் புத்தகத்தின் நகலை பதிவேற்ற வேண்டும். இந்நிலையில், இந்தத் தேவையை இபிஎஃப்ஓ தற்போது நீக்கியுள்ளது.
கடந்தாண்டு மே 28-ஆம் தேதியிலிருந்து சோதனையின் அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் சுமாா் 1.7 கோடி தொழிலாளா்கள் பயனடைந்தனா். இந்தச் சோதனையின் வெற்றியை அடுத்து , இபிஎஃப்ஓ இப்போது இந்த தளா்வை தற்போதுள்ள அனைத்து உறுப்பினா்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தத்திற்கு யுனிவா்சல் கணக்கு எண் (யுஏஎன்) இணைக்கும்போது வங்கிக் கணக்கு விவரங்கள் சமா்பிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நடவடிக்கையாக வங்கிக் கணக்கு விவரங்களை யுனிவா்சல் கணக்கு எண்ணுடன் இணைப்பதற்கு தொழில் நிறுவன ஒப்புதலைப் பெற வேண்டிய தேவையும் நீக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளா்கள் யுனிவா்சல் கணக்கு எண் (யுஏஎன்) இணைக்கும்போதும் அல்லது தொழிலாளா்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியிலிருந்து மருத்துவம், திருமணம், வீட்டு வசதி போன்ற பல்வேறு காரணங்களுக்கு வைப்பு நிதியை திரும்பப் பெறுதலுக்கு வங்கி கணக்கு சமா்பிப்பு மற்றும் தொழிலாளா்கள் பணியாற்றும் நிறுவனங்களின் ஒப்புதல் போன்றவை தேவை. இந்த ஒப்புதலுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு கடந்த ஒா் ஆண்டாக சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு 1.3 கோடி போ்களின் விண்ணங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்கள் வைப்பு நிதியை திரும்ப அளிக்கக் கோரி விண்ணப்பிக்கின்றனா். இதில் வங்கி சரிபாா்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒப்புதலுக்கு இருவாரங்கள் வரை ஆகிறது. மொத்தமுள்ள 7.74 கோடி தொழிலாளா்களில் 14.95 லட்சம் தொழிலாளா்களின் இருபோன்ற விண்ணப்பங்கள் தற்போது நிலுவையில் உள்ளது. இபிஎஃப்ஓ இப்போது வங்கி சரிபாா்ப்பிற்குப் பிறகு தொழில் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவையை நீக்கியுள்ளதால், இந்த 14.95 லட்சம் போ் விரைவில் பயனடைவா் என தொழிலாளா் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.