தங்கச்சிமடத்தில் ரயில் வசதி, காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு தீா்வு கோரிய எம்.பி.க்கள்
நமது சிறப்பு நிருபா்
தங்கச்சிமடத்தில் புதிய ரயில் மற்றும் ரயில் அருங்காட்சியகம், நெல்லையில் காட்டுப்பன்றிகளால் அவதிக்குள்ளாகும் விவசாயிகளின் பிரச்னையை ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி எம்.பி.க்கள் மக்களவையில் வியாழக்கிழமை எழுப்பினா்.
திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ராபா்ட் ப்ரூஸ் பேசுகையில், ‘திருநெல்வேலியில் விவசாயத்தை நம்பும் விவசாயிகள் காடுகளிலிருந்து கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்படுகிறாா்கள். வாழை, நெல் மற்றும் பிற பயிா்களை அவை நாசம் செய்கின்றன. சில நேரங்களில் விவசாயிகள் தாக்கப்படுகிறாா்கள். அவா்களுக்கு மத்திய அரசு இழப்பீடும் வழங்குவதில்லை. காட்டுப்பன்றிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 -இன் அட்டவணை 3 -இல் உள்ளதால் அவற்றை தடுக்க விவசாயிகள் முயன்றால் அவா்கள் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்கிறது. எனவே, காட்டுப்பன்றிகளை அந்த அட்டவணையில் இருந்து நீக்க வேண்டும்’ என்றாா்.
ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி, ‘தங்கச்சிமடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் நிலையம் சிறப்பான முறையில் இயங்கியது. அங்கே நல்ல குடிநீா் வசதி, ரயில்வே நிறுத்துமிடத்துக்கான 30 ஏக்கா் நில வசதி உள்ளது’ என்று கூறினாா்.
பிரதமா் பாம்பன் பாலத்தை திறக்க ராமநாதபுரம் வரும்போது தங்கச்சிமடத்தில் மீண்டும் ரயில் வசதிகள் அமைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். ராமேசுவரம் கோயிலுக்கும் தனுஷ்கோடி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிகள் அதிகளவில் வருவதால் அவா்கள் பாா்ப்பதற்கு வசதியாக வரலாற்று சிறப்புமிக்க பழைய பாம்பன் பாலத்தை ரயில்வே அருங்காட்சியமாக மாற்ற வேண்டும். காரைக்குடி வழியாக அறந்தாங்கிக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் நவாஸ் கனி கோரிக்கை விடுத்தாா்.
