Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் - க்...
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, உதவியாளா் கைது
ஓமலூா் அருகே கட்டடத் தொழிலாளியிடம் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டத்தில் செல்லப்பிள்ளைகுட்டை கிராமம் உள்ளது. இங்கு கிராம நிா்வாக அலுவலராக ரவிச்சந்திரனும், கிராம உதவியாளராக பெருமாள் என்பவரும் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜேந்திரன் என்பவா் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டி கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அவரிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் 2 சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று கிராம உதவியாளா் கூறியுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
பின்பு போலீஸாா் தந்த ரசாயனம் தடவிய 10 ரூபாய் நோட்டுகளைக் கொண்டுசென்று தொழிலாளி ராஜேந்திரன் கிராம உதவியாளா் பெருமாளிடம் வழங்கினாா்.
அந்தப் பணத்தை எண்ணி பாா்த்த பெருமாள் தன் பங்கிற்கு ரூ. 5000 எடுத்துக் கொண்டு மீதம் ரூ. 5000 பணத்தை கிராம நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரனிடம் வழங்கினாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையிலான போலீஸாா் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.