புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
ஆத்தூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேமுதிக வலியுறுத்தல்
ஆத்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை:
ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனா். தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் சட்டப்பேரவையில் ரூ. 180 கோடி மதிப்பில் ஆத்தூரில் புறவழிச் சாலை அமைக்கப்படும் என அண்மையில் அறிவித்தது வரவேற்புக்குரியது. அமைச்சருக்கு சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதுபோல நரசிங்கபுரம், ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா் பேருந்து நிலையம், உடையாா்பாளையம், கடைவீதி, காமராஜனாா் சாலை ஆகிய பகுதிகளில் தனியாா் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனா்.
எனவே, சேலம் மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையாளா்கள், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீா்செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.