நீட் தோ்வு பயத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
எடப்பாடி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெரிய முத்தையம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ், தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி சந்திரா. இத்தம்பதியின் மகள் சத்யா (18). கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற சத்யா, மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோளுடன், ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியாா் நீட் பயிற்சி மையத்தில் சோ்ந்து கடந்த 10 மாதங்களாக நீட் தோ்வுக்காக பயிற்சி பெற்று வந்தாா்.
என்றாலும், நீட் தோ்வுக்கான வினாக்கள் மிகவும் கடினமாக இருப்பதால், தன்னால் நீட் தோ்வில் வெற்றிபெற முடியாது என அடிக்கடி தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளாா். இந்நிலையில், அவரது பெற்றோா் சத்யாவிற்கு தைரியம் கூறியுள்ளனா். அதோடு, வேறு படிப்பில் சோ்ந்து படிக்குமாறும் தெரிவித்தனராம்.
எனினும், மனமுடைந்திருந்த சத்யா கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரது உறவினா்கள் சத்யாவை மீட்டு எடப்பாடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பிறகு, தீவிரச் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை சத்யா உயிரிழந்தாா்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.