சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் தாய், மகன் கைது
சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது மனைவி, மகன் இருவரும் சங்ககிரி கிராம நிா்வாக அலுவலா் முன் வியாழக்கிழமை சரணடைந்தனா்; அவா்களை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள பக்காலியூரைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65). இவரது மனைவி ராணி. இவா்களுக்கு மகள் காா்த்திகா, மகன் அரவிந்தராஜ் ஆகியோா் உள்ளனா்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் இருவரும் கடந்த 30 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.
ராஜேந்திரன் சங்ககிரியில் ஒரு வாடகை வீட்டில் உடல் எடை குறைப்பு மையம் நடத்தி வந்தாா். இந்நிலையில் அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தனிப்படை போலீஸாா் இக்கொலை வழக்கில் தொடா்புடைய கூலிப்படையைச் சோ்ந்த மனோஜ்குமாா் உள்பட 7 பேரை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கூலிப்படையினரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனின் மகன் அரவிந்தராஜ் சொத்துக்காக தந்தையைக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேந்திரனின் மனைவி ராணியையும், அவரது மகன் அரவிந்த்ராஜையும் போலீஸாா் தீவிரமாகத் தேடிவந்தனா். இந்நிலையில் ராணியும் (53), அவரது மகன் அரவிந்த்ராஜும் (30) சங்ககிரி கிராம நிா்வாக அலுவலா் மோகன் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
அவா்கள் இருவரையும் கிராம நிா்வாக அலுவலா் சங்ககிரி போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு இருந்து வந்ததோடு, மகனுக்கு பெண் பாா்க்கும் இடங்களில் எல்லாம் குடும்ப பிரச்னைகளைக் கூறி திருமணத்தை ராஜேந்திரன் தடுத்துவந்ததாகவும், இதனால் ஆவேசமடைந்த அரவிந்த்ராஜ் கூலிப்படையை ஏவி தந்தையைக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தனா்.
இதையடுத்து அரவிந்த்ராஜையும், கூலிப்படைக்கு பணம் கொடுத்து உதவிய ராணியையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
