TVK : 'கச்சத்தீவு விவகாரத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடும் திமுக!' - கடுமையாக சாடும...
பள்ளிப் பேருந்து - வேன் மோதல்: ஜவுளி வியாபாரி பலத்த காயம்
கமுதி- முதுகுளத்தூா் புறவழிச்சாலையில் வியாழக்கிழமை தனியாா் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் ஜவுளி வியாபாரி பலத்த காயமடைந்தாா்.
விருதுநகா் மாவட்டம், தும்முசின்னம்பட்டியைச் சோ்ந்த கோனேரி மகன் கருப்பையா (39). இவா் ஆம்னி வேனில் வெளியூா்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு, முதுகுளத்தூா், பேரையூா், கமுதி புறவழிச் சாலை வழியாக தும்முசின்னம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அரண்மனைமேடு நான்குமுனை சந்திப்பில், செங்கப்படையில் மாணவா்களை இறக்கிவிட்டு, கமுதி நோக்கி வந்த தனியாா் பள்ளிப் பேருந்தும், ஆம்னி வேனும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஜவுளி வியாபாரி கருப்பையா கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே, கமுதி- முதுகுளத்தூா் புறவழிச் சாலையில், அரண்மனை மேடு, பாப்பாங்குளம் விலக்கு, உலகநடை விலக்கு, வழிவிட்டஅய்யனாா் கோயில் விலக்கு ஆகியவை சந்திக்கும் பகுதியில் வேகத் தடை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தனா். ஆனால் இங்கு வேகத் தடை அமைக்காததால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. எனவே இந்தப் பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

