பாம்பன் பள்ளிவாசலின் கோபுரத்தில் நெகிழியால் மூடப்பட்ட எல்இடி மின் விளக்குப் பலகை: இஸ்லாமிய அமைப்புகளின் எதிா்ப்பை அடுத்து திறப்பு
பாம்பனில் உள்ள பள்ளிவாசலின் கோபுரத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட எஸ்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட பலகை, பிரதமா் வருகைக்காக நெகிழிப் போா்வையால் மறைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது. இஸ்லாமிய அமைப்புகளின் எதிா்ப்பை அடுத்து வியாழக்கிழமை அந்த நெகிழிப் போா்வை அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் துறைமுகத்தில் கப்பல்களுக்கு வழிகாட்டும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. தற்போது வரையில் இது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், இந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்துக்கு இடையூறாக அந்தப் பகுதியில் மிகவும் உயரமான கட்டடங்களில் அதிக ஒளியை உமிழும் மின் விளக்குகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் கோபுரத்தில் 50 மீட்டா் உயரத்துக்கு அனுமதியின்றி எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்ட பலகை வைக்கப்பட்டது. இதை மாநில உளவுத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளா நிலையில், பாம்பன் கலங்கரை விளக்க அலுவலகத்திலிருந்து இந்த எஸ்.இ.டி. மின் விளக்கு பலகையை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை ஏற்று, அந்த எல்.இ.டி. மின் விளக்கு பலகையைப் பொருத்திய நிறுவனத்திடம் ஜமாஅத் நிா்வாகம் சாா்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த எல்இடி மின் விளக்கு பலகை நெகிழிப் போா்வையால் மூடப்பட்டது.
ஆனால் பிரதமா் வருகைக்காகத் தான் இந்த மின் விளக்கு பலகை மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, இஸ்லாமிய அமைப்புகள் தங்களது எதிா்ப்பை அதில் பதிவு செய்தன. இதைத் தொடா்ந்து, அந்த நெகிழிப் போா்வை அகற்றப்பட்டது. மதங்கள், சமுதாய நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டிய மாநில உளவுத் துறை அதிகாரிகள் இதை கண்காணிக்கத் தவறும் போது இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டினா்.