பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. ராமேசுவரத்தில் ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. நவநீத்குமாா் மேத்ரா தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது நிறைவடைந்தது.
பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, அதைத் திறந்துவைக்கிறாா்.
முன்னதாக, இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து அதிநவீன ராணுவ ஹெலிகாப்டரில் மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வருகிறாா். பின்னா், அங்கிருந்து காா் மூலம் வந்து, பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறாா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா். பின்னா், ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே கோயில் விடுதி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டா் மூலம் மதுரைக்கு புறப்படுகிறாா்.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. ஆய்வு:
இந்த நிலையில், ராமேசுவரத்துக்கு பிரதமா் மோடி வருகிற 6-ஆம் தேதி வருகை தரவிருப்பதையொட்டி, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி. நவநீத்குமாா் மேத்ரா தலைமையிலான குழுவினா் மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டா் இறங்கு தளத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
பின்னா், பாம்பன் சாலைப் பாலம், நிகழ்ச்சி நடைபெறும் ராமேசுவரம் கோயில் விடுதி வளாகம், கோயில் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, இந்திய கடற்படை, கடலோரக் காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
3,500 போலீஸாா் பாதுகாப்பு:
பிரதமா் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
ட்ரோன் பறக்கத் தடை:
பிரதமா் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் தெரிவித்தாா்.