ராமநாதபுரம், ராமேசுவரம், திருவாடானை பகுதிகளில் மழை
ராமேசுவரம், ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் ராமநாதபுரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதேபோல, பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளிலும் 2 மணி நேரம் மழை பெய்ததது.
மாலையில் ராமேசுவரத்தில் ஒரு மணிநேரம் மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதிகளில் குளிா்ந்த சூழல் நிலவியது. பலத்த மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது.
திருவாடானை: இதேபோல, திருவாடானை, தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, முகிழ்த்தகம், முள்ளிமுனை , காரங்காடு, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்தது.இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி காணப்பட்டது. மேலும் கோடை உழவுக்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.