``சதீஷ்குமார் வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகம்" - கொதிக்கும் வியாபாரிகள்
தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பிறகு கலப்படம் இல்லை என்று பின்வாங்கிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் தரப்பிலிருந்து கடுமையான குரல்கள் ஒலிக்கின்றன.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நல சங்கத் தலைவர் வெங்கடேசனிடம் பேசியபோது, “சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விவசாயிகளுக்கு மிகபெரிய துரோகத்தை இழைத்துள்ளார். 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்த தர்பூசணி, தற்போது 2 ரூபாய்க்குக்கூட வாங்க ஆளில்லாத நிலையில்தான் இருக்கிறது. கார்ப்பரேட் குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்தச் செயலை செய்துள்ளார். குளிர்பானங்களின் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. மதுபானங்களில் கலந்து குடிப்பதற்காகவே மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சரிந்துபோன விற்பனையைத் தூக்கி நிறுத்த சதீஷ்குமார் போன்ற அதிகாரிகள் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
‘தர்பூசணியில் கலப்படம் ஒன்றிரண்டு இடங்களில்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன’ என்கிறார். அது எங்கே நடக்கிறது என்று அவர் காட்டவேண்டும். அதேபோல சர்க்கரை பாகுவை தர்பூசணியில் ஏற்றி விற்பனை செய்கிறார்கள் என்கிறார். சர்க்கரையின் விலை என்னவென்று தெரியுமா அவருக்கு? அவர் தர்பூசணி குறித்து வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. இதனால் விவசாயிகள் வயிற்றில்தான் அடித்துள்ளார். வெளிநாட்டு குளிர்பானங்களின் மாயையிலிருந்து விலகி, மக்கள் இயற்கையான, சத்துள்ள பழங்களின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனால், 20,000 ஏக்கருக்கு மேலான தர்பூசணி கொள்முதல் செய்யப்படாமல் வயலிலேயே அழுகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் வீட்டுக்கு நெருக்கமானவர் என்பதால் இவர் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்குகிறது. உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்ட இவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடவும் இருக்கிறோம். மக்களுக்கு எதிராக செயல்படும் இவர் போன்ற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்றார்.
தர்பூசணி விவகாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கோயம்பேடு சந்தை வியாபாரிகளும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அருண்குமாரிடம் பேசியபோது, “உணவு பாதுகாப்பு துறைக்கு தகுதியே இல்லாத நபர் இந்த சதீஷ்குமார். இவர் சொல்லும் அனைத்து தகவல்களும் பொய்யானவை. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இப்படி சிறு, குறு வியாபாரிகள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த கோடை காலத்தில் ரோட்டோரங்களில் தர்பூசணிகளை வைத்து விற்பனை செய்யும் பல வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளார். 1 டன் தர்பூசணி 10,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்தது. இவர் பரப்பிய வீடியோவால் தற்போது 1 டன் 2,000 ரூபாய்க்குத்தான் விற்பனையாகிறது. அதாவது 1 கிலோ 2 ரூபாய். வியாபாரிகள் களத்தில் இறங்கி நேற்றிலிருந்து தர்பூசணியை சாப்பிடச் சொல்லி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் இவரிடம் பகைத்து கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறார்கள். விளம்பர வெளிச்சத்துக்காக வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகமாடுகிறார். உண்மையான கலப்படம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். விளம்பரத்துக்காக இப்படி செய்து வியாபாரிகள் வாழ்வில் மண் அள்ளி போடுவதை தவிர்க்க வேண்டும்.

இவர் இந்தப் பணியில் இருக்க தகுதியற்றவர். இவரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும். தன்னை அப்பா என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாபாரிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விளக்கம் கேட்பதற்காக, சதீஷ்குமாரைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். நம்முடைய அழைப்பை அவர் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருக்கிறார். அவர் விளக்கம் தரும் பட்சத்தில் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.