செய்திகள் :

தர்பூசணியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம் ரசாயன ஊசியல்ல; வதந்திகளை நம்பவே நம்பாதீர்கள் - வேளாண்துறை

post image

“கடையில் வாங்கிய தர்பூசணியை சிறு துண்டாக வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும்போது துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி. இயற்கையான தர்பூசணியில் நிறம் ஒட்டாது. தர்பூசணி பழத்தின் உட்பகுதியில் சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் சிறிது வெள்ளை நிறம் இருந்தால், அது ஊசி போடப்பட்டதற்கான அறிகுறி” - இப்படியெல்லாம் பேசி சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர் சதீஷ்குமார், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அது மின்னல் வேகத்தில் ஃபார்வர்ட் ஆக... தர்பீஸ் எனப்படும் தர்பூசணியின் வியாபாரம், அதலபாதாளத்துக்குப் போய்விட்டது. இந்நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், ஆங்காங்ககே உணவுப் பாதுகாப்புத் துறைக்கு எதிராக போராட்டங்களும் ஆரம்பமாயின.

தர்பூசணி

இதையடுத்து, “நாங்கள் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. எல்லா விவசாயிகளும் ஊசிபோடுகிறார்கள் என்று சொல்லவில்லை. அந்தத் தகவலில் உண்மையில்லை. அது வதந்திதான். கெட்டுப்போன தர்பூசணி பழங்கள், எலி கடித்த பழங்கள் ஆகியவற்றைத்தான் நாங்கள் அழித்தோம். நாங்கள் பரிசோதித்த எந்தப் பழத்திலும் ரசாயனம் நிறமி கலக்கப்படவில்லை” என்று மீடியாக்களைக் கூட்டி திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார், அதே உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார். ஆனாலும் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாங்கிச் சாப்பிடவே தயங்குகிறார்கள். இதனால், தர்பூசணி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தர்பூசணியின் ரசாயனம்... அடிப்படை ஆதாரமற்றது.

இதில் என்னதான் உண்மை என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தர்பூசணி அதிகமாக விளைவிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றான செங்கல்பட்டு மாவட்டத்தினுடைய தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகனிடம் கேட்டோம். மிக விரிவாகவும்.. தெள்ளத் தெளிவாகவும், அவர் விவரித்தார்.
“உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோ அடிப்படை ஆதாரமற்றது. எந்த விவசாயியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, 'எரித்ரோசைன்' (Erythrosine) என்ற நிறமி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது' என்று கூறுகிறார். ஆனால், எரித்ரோசைன் என்பது கேக்குகள், பேக்கரி பொருள்கள் என அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது நல்ல நிறம் வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப் பொருள். ஆனால், இதை தர்பூசணியில் பயன்படுத்துவதற்கு எந்த அவசியமும் கிடையாது. ஏனெனில், தர்பூசணியில் இயற்கையாகவே நல்ல நிறம் வரக்கூடிய ரகங்களும் உள்ளன.

தர்பூசணி

தர்பூசணியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. மிருதுளான், என்.எஸ்.295, மகேந்திரா, வில்லியம்சன், விக்ரமன், அரோக்கி, விஷாலா என பல ரகங்கள் உள்ளன. இவை இளம்சிவப்பு முதல் அடர் சிவப்பு வரை நிறங்களில் மாற்றம் அடையும். மண்ணின் தன்மை, உரப் பயன்பாடு, பாசன முறை, காலநிலை, ரகங்களின் தன்மை என அனைத்தையும் பொறுத்து தர்பூசணி பழத்தின் நிறமும் சுவையும் மாற்றம் அடையும். எனவே, தர்பூசணி பழம் சிவப்பாக இருந்தால், அது ஊசி போட்டு மாற்றிய பழம் என்ற அர்த்தம் கிடையாது. மேலும் ஊசி போடப்பட்டிருந்தால் தர்பூசணி ஒரே நாளில் கெட்டுவிடும்.

தர்பூசணி

கற்கள் குத்தினாலோ, குச்சிகள் மூலம் ஓட்டை விழுந்தாலோகூட ஒரே நாளில் பழம் கெட்டுவிடும். எந்தச் சேதாரமும் ஏற்படாமல் இயற்கையாக அறுவடை செய்த பழங்கள் 8 முதல் 10 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம். இப்படியிருக்கும் பட்சத்தில் ஊசி போட்டு நிறத்தை மாற்றி விற்பனை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். எப்போதோ பரப்பப்பட்ட வீடியோவை வைத்துக் கொண்டு தர்பூசணியில் ஊசி போடுகிறார்கள் என்று வதந்தியைப் பரப்புகிறார்கள்" என்று சொன்ன மோகன், மேலும் தொடர்ந்தார்.

ரசாயனங்களின் விலை அதிகம்!
"
வயலிலிருந்து தர்பூசணியை பறிக்கும்போது அதன் உள்ளே இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும். அது சந்தைக்கு வருவதற்கு 3 முதல் 5 நாள்களாகும். அதன்பிறகு நன்றாக பழுத்து சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும். நாள்கள் செல்ல செல்ல பழம் நன்றாக பழுக்கும். அப்போது அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும். ஊசி போட்டு நிறம் மாற்றுவதால் பழங்கள் அதிக விலைக்கும் விற்க போவதில்லை. மேலும் தர்பூசணியில் செலுத்தப்படுவதாக சொல்லும் எரித்ரோசைன் ரசாயன நிறமியின் விலையும் அதிகம். அதை வாங்கி ஒவ்வொரு பழத்திலும் செலுத்துவதற்கான தேவையோ, நேரமோ விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இல்லை. அதனால் அவர்களுக்குக் கூடுதல் செலவுதான்.

தர்பூசணி


உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியும் எங்கோ ஒரு பழத்திலோ... இரண்டு பழத்திலோ கலப்படம் செய்து விற்பதாக மேலோட்டமாக கூறுகிறார். எங்கே, எப்போது கலப்படம் நடந்தது என்பதற்கான ஆதாரமாக எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு பழங்கள் சார்ந்த அடிப்படை புரிதல் வேண்டும். பழங்களின் ரகங்கள் அதன் நிறங்கள் குறித்த அடிப்படை அறிவு அதிகாரிகளுக்கு அவசியம். எந்தப் பழமாக இருந்தாலும் டிஷ்யூ பேப்பர் வைத்து துடைக்கும்போது பழத்தினுடைய இயல்பான நிறம் ஒட்டத்தான் செய்யும். டிஷ்யூ பேப்பரில் நிறம் ஒட்டியுள்ளது என்பதற்காக அது செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட பழம் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி, முறையான பரிசோதனை செய்து முடிவுகள் வந்த பிறகே கலப்படம் என்று அறிவிக்க வேண்டும்.

விற்பனைக்கு வந்து குவிந்துள்ள தர்பூசணி பழங்கள்.

பழங்களில் உள்ள சிவப்பு நிறத்துக்கு லைகோபின் (Lycopene) என்ற இயற்கை என்சைம்தான் காரணம். இதுவே, ஆரோக்கி என்ற தர்பூசணி ரகமாக இருந்தால் வெளியே அடர்பச்சை நிறமும் உள்ளே மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இந்த நிறத்துக்குக் காரணம், பீட்டா கரோட்டின் என்ற என்சைம். விஷாலா போன்ற பழ வகைகளில் வெளியே தோல் மஞ்சள் நிறமாகவும் உள்ளே பழம் சிவப்பு நிறமாகவும் இருக்கும். அது அந்தப் பழத்தின் தன்மை" என்றவர்,

உணவு பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பு வேண்டும்!


"ஒவ்வொரு பழத்துக்கும் அதன் தன்மைகள் மாறுபடும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாகுபடி செய்வது டிராகன் கிங், மிருதுளா, வில்லியம்ஸ், என்.எஸ்.295 போன்ற நவீன தர்பூசணி ரகங்கள்தான். இவை அனைத்தும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். பழுக்க பழுக்க அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும். ஆக, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பொறுப்பு உணர்வோடு இந்த விஷயத்தை அணுகியிருக்க வேண்டும். பொத்தம் பொதுவாக செயற்கை நிறமி கலக்கப்பட்ட பழம் என்று முடிவுக்கு வருவது ஏற்புடையதல்ல.

தர்பூசணி குறித்து வேளாண்மைத் துறையினர் ஆய்வு

செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட தமிழ்நாட்டின் பலமாவட்டங்களிலும் 18,500 ஹெக்டருக்கு மேல் தர்பூசணி விவசாயம் நடைபெறுகிறது. 5 லட்சம் டன் அளவுக்கு விளைச்சல் இருக்கிறது. இதில் எத்தனை டன்களை விவசாயிகள் செயற்கை நிறமியை வைத்து சிவப்பு நிறமாக்க முடியும்? பெரும்பாலும் தற்போது இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இந்தநிலையில், கலப்படம் செய்யப்பட்ட பழம் என்று வதந்தி கிளப்புவது நுகர்வோரை குழப்பமடைய செய்யும் செயலே. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் விஷயம்" என்று வருத்தத்தைப் பதிவு செய்த மோகன், நிறைவாக,

நம்பிக்கையோடு சாப்பிடுங்கள்... நலம் பெறுங்கள்!


"
தர்பூசணி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ரகங்களின் மேம்பாட்டினால் தற்போது விற்பனையாகும் தர்பூசணி பழங்களில் சிவப்பு நிறம் இருந்து வருகிறது. பழங்கள் சிவப்பாக இருக்கக் கூடாது என்ற எந்த விதியும் இல்லை. பல வகையான அடர்சிவப்பு நிற தர்பூசணி பழ வகைகளை, வயல்களுக்கே நேரடியாக அழைத்துச் சென்று காட்ட நாங்கள் தயார்.

தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

இந்த கோடைக் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது மனிதர்களுக்கு நீரிழப்பு வராமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, பி6, சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. தர்பூசணியில் 92 சதவிதம் நீர் உள்ளது. இவ்வளவு நன்மைகள் கொண்ட தர்பூசணியை நம்பிக்கையோடு சாப்பிடுங்கள்... அதன் பலன்களை அனைவரும் பெறுங்கள் என்று மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்” என்று அக்கறையோடு சொன்னார்.

``சதீஷ்குமார் வீடியோக்காரர்களை அழைத்துக்கொண்டு சோதனை செய்வதுபோல் நாடகம்" - கொதிக்கும் வியாபாரிகள்

தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பிறகு கலப்படம் இல்லை என்று பின்வாங்கிய சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியைத் தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக 2022-ல் தமிழக அரசு அறிவித்தது.இதையடுத்து திண்டுக்கல்... மேலும் பார்க்க

ஊட்டி: தரிசு நிலம் டு ஆர்கானிக் கூட்டு வேளாண்மைத் தோட்டம்; அசத்தும் ஆனைப்பள்ளம் பழங்குடிகள்!

ஆங்கிலேயர்களால் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மேலை நாட்டுக் காய்கறி சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுகளின் ஊற்றுக்கண்ணாக இருந்து வ... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.செந்தமிழ்ச்செல்வன், வடுகக்குடி, தஞ்சாவூர். 96885 25605 நல்ல நிலையில் உள்ள பழைய டிராக்டர். மதுகண்ணன்,சிவகங்கை. 96550 16306 கீழாநெல்லி, துத்தி, தும்பை, அம்மான் பச்சரிசி, ஆவாரம்பூ... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு; கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் போராட்டம்!

தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பலமுறை நிபுணர் குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெ... மேலும் பார்க்க

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் - டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந... மேலும் பார்க்க