தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!
முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு; கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி தமிழக விவசாயிகள் போராட்டம்!
தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பலமுறை நிபுணர் குழுவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அணையை இடிக்க வேண்டும், அணைக்கு அருகே புதிய அணை கட்ட வேண்டும் எனக் கூறி முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு அமைப்பினர் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2022-ல் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதங்களுக்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 2024 அக்டோபர் 1 முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணை பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டன.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கித் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு தார்பில் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பிரியேஸ் மற்றும் 2 தொழில்நுட்ப வல்லநுர்கள் உள்ளனர்.
இக்குழுவில் கேரள அரசு சார்பில் உள்ள 2 அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி, பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்டம் குமுளியில் உள்ள மாநில எல்லையை முற்றுகையிட முயன்றனர். இதற்காக கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேரள எல்லையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் முன்பாக இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குமுளி மலைச் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.