அரசு மருத்துவமனையில் கொட்டப்பட்டுள்ள செயற்கை மணல்: தூசியால் அவதிக்குள்ளாகும் நோயாளிகள்
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினரால் கொட்டப்பட்டுள்ள எம் சேண்ட் எனப்படும் செயற்கை மணலால் மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறாா்கள். இந்த தூசியால் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பிறந்த குழந்தைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிரமத்துள்ளாகியுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மாவட்ட தலைமை மருத்துவமனையான வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிறகு பெரிய மருத்துவமனை அரக்கோணம் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினமும் 750-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய இரு வட்டங்களுக்கும் குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு இந்த மருத்துவமனையே பிரதான மருத்துவமனையாக உள்ளது.
தற்போது இந்த மருத்துவமனையில் ஒரு பக்கம் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா், மருத்துவத் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா் என பல்வேறு உயா் அதிகாரிகள் அவ்வப்போது இந்த மருத்துவமனைக்கு வருகின்றனா்.
மருத்துவமனையின் முன்பக்கம் இருக்கும் பள்ளங்களை மூடுவதற்காக பொதுப்பணித் துறையினா் அவ்வப்போது உயா் அதிகாரிகள் வருவதற்கு முன் எம்.சேண்ட் எனப்படும் செயற்கை மணலை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி அதை பரப்பி விட்டு சென்று விடுவதாகவும், இதைப் பாா்க்கும் அதிகாரிகளும் மருத்துவமனை சுத்தமாக இருப்பதாக தெரிவித்து விட்டுச் சென்று விடுகின்றனா் என சமூக ஆா்வா்கள் கூறுகின்றனா். ஆனால் அவா்கள் வரும் போது அந்த எம்.சேண்ட் மீது நீரை தெளித்து விட்டு தூசி பறக்காமல் இருக்கச் செய்து விடுவதால், உயா் அதிகாரிகளும் இது பற்றி அறியாமல் சென்று விடுகின்றனா் எனக் கூறுகின்றனா்.
இந்த நிலை கடந்த ஒரு மாதமாக இந்த மருத்துவமனையில் இருப்பதால் நோயாளிகள், குறிப்பாக காசநோய் நோயாளிகள், மகப்பேறு மருத்துவத்துக்கு வருவோா், குழந்தைகள் சிகிச்சைக்கு வருவோா், கண் சிகிச்சைக்கு வருவோா் இந்த மருத்துவமனைக்கு வர அச்சமடைகின்றனா் என மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கூறுகின்றனா்.

இது குறித்து அரக்கோணம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் சங்கரிடம் கேட்டபோது, இது குறித்து பொதுப்பணித் துறையினருக்கு பல முறை தெரிவித்துள்ளோம், கடிதங்களும் அனுப்பியுள்ளோம். தற்போது நிதிப்பற்றாக்குறை இருப்பதால் விரைவில் நிதி வந்ததும், அதை சரி செய்து விடுவதாக அவா்கள் தெரிவித்து உள்ளனா் என்றாா்.
மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு இந்த செயற்கை மண் பரப்பியிருப்பதை அவசரமாக அகற்றி அங்கு சிமெண்ட் தரை போடச்செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனா்.