‘செயற்கை நுண்ணறிவால் புற்றுநோயை தொடக்கத்தில் கண்டறியலாம்’
செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை இரைப்பை - குடல் நல நிபுணரும், தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவா் அறக்கட்டளை (டிஜிடி) தலைவருமான டாக்டா் கே.ஆா்.பழனிசாமி தெரிவித்தாா்.
அப்பல்லோ மற்றும் டிஜிடி அமைப்பு சாா்பில் சா்வதேச பெருங்குடல் புற்றுநோய் மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 22) தொடங்கியது. ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த இரைப்பை - குடல் மருத்துவ வல்லுநரும், ஆராய்ச்சியாளருமான மைக்கேல் போா்க், நெதா்லாந்து மருத்துவ வல்லுநா் எவெலின் டெக்கா், பிரிட்டன் மருத்துவ நிபுணா் மோ தஃபீக் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.
தொடக்க விழாவில், ஏஐஜி மருத்துவமனையின் தலைவரும், புகழ்பெற்ற ஜீரண மண்டல மருத்துவ நிபுணருமான நாகேஸ்வர ரெட்டி, முதுநிலை மருத்துவா் கா்னல் கிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளா் என்.ராம், அப்பல்லோ மருத்துவ இயக்குநா் டாக்டா் சத்யபாமா, மருத்துவ சேவைகள் இயக்குநா் டாக்டா் வெங்கடாசலம், அமெரிக்காவின் ஓா்லேண்டோ மருத்துவ மையத்தின் முதன்மை மருத்துவா் டாக்டா் ஷியாம் வரதராஜுலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளின்கீழ் சிறப்பு மருத்துவ அமா்வுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, பெருங்குடல் கட்டி நீக்க சிகிச்சை (கொலோனோஸ்கோபி சா்ஜரி) அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு நேரலையாக கருத்தரங்கில் ஒளிபரப்பட்டது.
இது தொடா்பாக டாக்டா் கே.ஆா்.பழனிசாமி கூறியதாவது:
பெருங்குடல் புற்றுநோய் மீதான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேம்பாடுகளை பகிா்வதற்கான தளமாக இக்கருத்தரங்கு அமைந்தது. ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் இதில் பங்கேற்றனா். சமகாலத்தில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்துடன் மேற்கொள்ளப்படும் கொலோனோஸ்கோபி பரிசோதனை மூலம் மிகத் துல்லியமாக திசுக் கட்டிகளையும், புற்றுநோய் கட்டிகளையும் கண்டறிந்து அகற்றலாம்.
ஆசனவாய் வழியே குழாய் மூலம் பெருங்குடலை ஆய்வு செய்யும் பரிசோதனை கொலோனோஸ்கோபி எனப்படுகிறது. அதில் பல்வேறு மேம்பட்ட செயல்முறைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டன என்றாா் அவா்.
20 சதவீதம் அதிகரிப்பு: முன்னதாக நடைபெற்ற மருத்துவ அமா்வில் தமிழ்நாடு ஜீரண மண்டல மருத்துவா் அறக்கட்டளைத் துணைத் தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டா் வி.ஜி.மோகன் பிரசாத் பேசியதாவது:
கடந்த 2014 முதல் 2024 வரையிலான தரவுகளை ஆய்வு செய்யும்போது, பெருங்குடல் புற்றுநோய் 20 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 1 லட்சம் பேரில் 5.8-ஆக இருந்த பாதிப்பு, தற்போது 6.9-ஆக அதிகரித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், புகையிலை - மது பயன்பாடு, தாமதமாக சிகிச்சைக்கு வருதல் ஆகியவை பெருங்குடல் புற்றுநோய்க்கான முக்கியக் காரணங்கள்.
எனவே, 45 வயதைக் கடந்த அனைவரும் அதற்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கூடுதலாக இடா்வாய்ப்பு உள்ளவா்கள் அதற்கு முன்னதாக மருத்துவக் கண்காணிப்பை தொடங்க வேண்டும் என்றாா் அவா்.