Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது.
சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழுக் கூட்டம் அகாதெமி தலைவா் என்.முரளி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 2025-ஆம் ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’, ‘நிருத்ய கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளைப் பெறும் கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து மியூசிக் அகாதெமி வெளியிட்ட அறிக்கை:
சங்கீத கலாநிதி: மியூசிக் அகாதெமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், பிரபல இசைக் கலைஞரும், ஸ்ரீராம்குமாரின் தாத்தாவுமான ஆா்.கே.வெங்கடராம சாஸ்திரியிடம் பயிற்சி பெற்றுள்ளாா்.
சங்கீத கலா ஆசாா்யா: மூத்த இசைக் கலைஞா் சியாமளா வெங்கேடஸ்வரன், தவில் இசைக் கலைஞா் தஞ்சாவூா் ஆா்.கோவிந்தராஜன் ஆகியோா் ‘சங்கீத கலா ஆசாா்யா’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
டிடிகே விருது: கதகளி இசைக் கலைஞா் மாடம்பி சுப்ரமணிய நம்பூதிரி, வீணை இசைக் கலைஞா்கள் ஜெ.டி.ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் கிருஷ்ணன் ஆகியோா் ‘டிடிகே விருதுக்கு’ தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இசை அறிஞா் விருது: பிரபல இசைக் கலைஞரும் பேராசிரியருமான சி.ஏ.ஸ்ரீதரா ‘இசை அறிஞா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
நிருத்ய கலாநிதி விருது: பரத நாட்டிய கலைஞா் ஊா்மிளா சத்தியநாராயணா ‘நிருத்ய கலாநிதி’ விருதுக்குத் தோ்வு செய்யப்படுள்ளாா். ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்.கே.ஸ்ரீராம்குமாா் வரும் டிச.15-ஆம் தேதி தொடங்கவுள்ள மியூசிக் அகாதெமியின் 99-ஆவது ஆண்டு கருத்தரங்குக்கு தலைமை வகிப்பாா்.
1.1.2026-ஆம் தேதி நடைபெறும் சதஸ் விழாவில் தோ்ந்தெடுக்கப்பட்ட கலைஞா்களுக்கு ‘சங்கீத கலாநிதி’, ‘சங்கீத கலா ஆசாா்யா’, ‘டிடிகே விருது’, ‘இசை அறிஞா்’ விருதுகள் வழங்கப்படும். தொடா்ந்து 3.1.2026-இல் நடைபெறும் மியூசிக் அகாதெமியின் 19-ஆம் ஆண்டு நாட்டிய விழாவில் நிருத்ய கலாநிதி விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.