Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாராக சொன்ன ஸ்ரேயாஷ்
பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 243 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சிறப்பாக ஆடி 97 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஸ்ரேயாஷால் சதம் அடித்திருக்க முடியும். ஏனெனில், 19 வது ஓவரிலேயே ஸ்ரேயாஷ் ஐயர் 97 ரன்களை எட்டிவிட்டார்.

ஆனால், கடைசி ஓவரில் சஷாங்க் சுங் ஸ்ரேயாஷூக்கு ஸ்ட்ரைக்கே கொடுக்கவில்லை. அவரே 6 பந்துகளையும் ஆடி 23 ரன்களை சேர்த்துக் கொடுத்தார். ஸ்ரேயாஷின் சதத்துக்காக சஷாங்க் சிங் சிங்கிள் எடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால், களத்தில் ஸ்ரேயாஷ் ஐயர்தான் எனக்காக நீ சிங்கிள் எடுக்காதே.. என சஷாங்கிற்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
இதுசம்பந்தமாக இன்னிங்ஸ் இடைவேளையில் பேசிய சஷாங்க் சிங், 'நான் ஆடியது ஒரு நல்ல கேமியோ. பெவிலியலிருந்து ஸ்ரேயாஷின் ஆட்டத்தைப் பார்க்க அத்தனை உத்வேகமாக இருந்தது. கடைசி ஓவருக்கு முன்பாக ஸ்ரேயாஷ் என்னிடம் பேசினார். 'நீ உன்னுடைய ஆட்டத்தை ஆடு. என்னுடைய சதத்தைப் பற்றி யோசிக்காதை. பந்தை பார்த்து அதற்கேற்ப ஷாட் ஆடு!' என தெளிவாகக் கூறிவிட்டார்.

பவுண்டரி அடிப்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் முயன்றேன். என்னுடைய பலம் என்னவென எனக்கு தெரியும். எனக்கு வராத விஷயங்களை முயற்சிக்க மாட்டேன்.' எனப் பேசியிருந்தார்.
அணியின் கேப்டனாக அணியை முன்னிலைப்படுத்தி ஸ்ரேயாஷ் பக்குவமாக நடந்திருக்கிறார்.