பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
Dhoni : '2023 ஃபைனல், கோலி நட்பு, சேப்பாக் மைதானம்' - நெகிழ்ந்த தோனி | விரிவான பேட்டி
ஐ.பி.எல் யை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் JioStar நிறுவனத்துக்கு தோனி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அவரின் ஓய்வு, கோலியுடனான நட்பு, ரசிகர்களின் ஆதரவு என பலவற்றை பற்றியும் தோனி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். தோனியின் அந்த விரிவான பேட்டி இங்கே.

``2023 சீசனின் இறுதிப்போட்டியின் போது உங்களின் மனநிலை என்னவாக இருந்தது? போட்டியை வென்ற பிறகு நீங்களும் வழக்கத்துக்கு மாறாக ரியாக்ட் செய்திருப்பீர்களே?"
``அந்தப் போட்டியில் எங்களுக்கு எப்போதெல்லாம் பவுண்டரி தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் எதோ ஒரு வீரர் பவுண்டரி அடித்துக் கொடுத்தார். கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை சென்றதுதான் அந்தப் போட்டியின் சுவாரஸ்யத்தை இன்னும் கூட்டியது.
ஜடேஜா அடித்த சிக்சரும் பவுண்டரியும் சிக்சரும் அபாரமானவை. குறிப்பாக, கடைசிப்பந்தில் அவர் அடித்த பவுண்டரி இருக்கிறதே. பல சமயங்களில் அப்படியான டெலிவரிக்கள் நம்முடைய பேடில் வந்து மோதிவிடும். ஆனால், அன்றைக்கு பேட்டில் பட்டு இடைவெளியில் சென்று பவுண்டரி ஆனது. அந்தக் கடைசிப் பந்தின் போது நான் பெவிலியனில் அமர்ந்திருந்தேன்.
என்னால் எதுவுமே செய்ய முடியாது. ஜடேஜா என்ன நினைக்கிறார் என்று கூட எனக்கு தெரியாது. அவரை முழுமையாக நம்ப மட்டுமே முடியும். ஜடேஜா அனுபவமான வீரர். அவர் அதேமாதிரியான சூழல்களில் பலமுறை இருந்திருக்கிறார். அதனால் அவரை நம்பினோம். அந்தப் போட்டி நடந்த விதம் கடைசி வரை இருந்த பதற்றம் எல்லாமே சேர்ந்து உணர்ச்சிகரமான நிலைக்கு சென்றிருந்தோம்.
அதனால்தான் நானும் அப்படி ரியாக்ட் செய்தேன். 2013 சாம்பியன்ஸ் டிராபி ஞாபகமிருக்கிறது. அந்தத் தொடருக்கு முன்பாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கவில்லை. யாருமே எங்களை வலுவான அணியாக கணிக்கவில்லை. அப்படியொரு நிலையிலிருந்து நாங்கள் வென்றோம். இந்த மாதிரியான தருணங்கள் ரொம்பவே ஸ்பெஷலானவை.”
``நீங்கள் பேட்டிங் ஆடும்போது போஜ்புரி கமெண்ட்ரியில் வசனமெல்லாம் பேசி கலக்குகிறார்கள். நீங்கள் கமெண்ட்ரிக்களை கவனிப்பதுண்டா?”
``போட்டியில் ஆடும்போது கமெண்ட்ரியை பற்றி யோசிக்க முடியாது. ஆனால், ரீப்ளேக்களில் வர்ணனையாளர்கள் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை கவனிப்பேன். பெரும்பாலான வர்ணனையாளர்கள் முன்னாள் வீரர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில், என்னை விட அவர்களுக்கு இந்த கிரிக்கெட் உலகில் விஷயங்களை அறிந்துகொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நான் ஆண்டுக்கு 17 போட்டிகளில் ஆடினால், அவர்கள் 100 க்கும் அதிகமான போட்டிகளில் வர்ணனை செய்கிறார்கள். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் கேட்டுவிட முடியாது.
ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் நமக்குதான் அணியின் பலம் பலவீனங்களை பற்றி தெரியும். ஆனாலும், வெளியில் இருக்கும் ஒருவரின் மனநிலையும் எண்ணமும் எப்படி இருக்கிறதென்பதை அறிந்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தை இப்படியும் செய்து பார்க்காலமா என்கிற சிந்தனையை வர்ணனைகள் கொடுக்கக்கூடும்.”

``சேப்பாக்கம் மட்டுமில்லாமல் லக்னோ, மும்பை என நீங்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் உங்களை கொண்டாடி தீர்க்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?”
``ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் இத்தனை ஆண்டுகள் செய்த பணிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவர்கள் இப்படி ஆர்ப்பரிக்கிறார்கள். ரசிகர்களுக்கு நானும் நன்றி கூறிக்கொள்கிறேன். ஒரு மைதானம் முழுமைக்கும் நான் எப்போது பேட்டிங் ஆட வருவேன் என காத்திருக்கிறார்கள். நான் நன்றாக ஆட வேண்டும் என நினைக்கிறார்கள். எதிரணி வெல்ல வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் கூட நான் நன்றாக ஆட வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார்கள். கண்டிப்பாக, இது ஒரு நல்ல உணர்வையே தருகிறது.”
``சேப்பாக்கத்துக்கு பிறகு உங்களுக்கு பிடித்தமான மைதானம் எது?”
``சேப்பாக்கத்துக்கு பிறகு என சொல்ல முடியாது. எல்லாமே சமம்தான். எல்லா இடங்களிலும் ரசிகர்கள் முழுமனதோடு மகிழ்ச்சியோடு வந்தே ஆதரவளிக்கிறார்கள். அதனால் என்னால் இதை வரிசைப்படுத்த முடியாது. மும்பை கொஞ்சம் ஸ்பெசலான இடம். 2007 இல் உலகக்கோப்பை வென்று வந்த போது எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். 2011 இல் வான்கடேவில்தான் உலகக்கோப்பையை வென்றோம். எனக்கு நிறைய நல்ல தருணங்கள் மும்பையில் இருந்திருக்கிறது. பெங்களூரு ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு எப்போதுமே அதிகமாக இருக்கும். லக்னோ, கொல்கத்தா என எல்லா இடங்களிலும் அப்படித்தான்.”
``உங்களின் நண்பர் விராட் கோலியை பற்றி சொல்லுங்களேன்.”
``எங்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு இருக்கிறது. அணிக்காக எப்படியாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். 60 ரன்களை எடுத்துவிட்டு திருப்தியடைய மாட்டார். கட்டாயம் செஞ்சுரி அடிக்க நினைப்பார். கடைசி வரை நாட் அவுட் ஆக நிற்க நினைப்பார். பேட்டிங்கின் மீதான அவரின் அந்த பசிதான் அவரை இன்னும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. நானும் அவரும் நிறைய உரையாடியிருக்கிறோம். எல்லாமே நேர்மையான மனதில் பட்டதை வெளிக்காட்டும் உரையாடலாக இருந்திருக்கிறது. அவரது பேட்டிங் பற்றி என்னிடம் பேசுவார். நானும் மனதில் பட்டதை சொல்வேன்.
ஆரம்பத்தில் ஒரு கேப்டனுக்கும் அணிக்குள் புதிதாக வந்த வீரருக்குமான உறவுதான் எங்களுக்குள் இருந்தது. நிறைய உரையாடல்களுக்கு பிறகு நண்பர்களானோம். ஆனாலும் சீனியர் ஜூனியர் என்கிற அந்த கோட்டையும் நாங்கள் எப்போதுமே மதித்திருக்கிறோம்.”

``சென்னை மும்பை ரைவல்ரி எப்போதுமே எதிர்பார்ப்புக்குரியது. நீங்களும் மும்பைக்கு எதிராக சிறப்பான ரெக்கார்ட் வைத்திருக்கிறீர்களே?”
``ஒரு பேட்டராக எல்லா அணிகளுக்கு எதிராகவும் நன்றாக ஆட வேண்டும் என்றே நினைக்கிறேன். தனிப்பட்ட முறையிலோ அணிரீதியாகவோ யாரையும் ரைவல்ரியாக நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் அது கூடுதல் அழுத்தத்தைதான் கொடுக்கும்.”
``உங்களின் ஓய்வு பற்றி நிறைய விஷயங்கள் பேசப்படுகிறதே?”
``இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவீர்கள்?" என்று கேட்டால், `தெரியாது’ என்றே சொல்வேன். ஒரு வருடமாக இருக்கலாம், இரண்டு வருடங்களாக இருக்கலாம், அல்லது பத்து வருடங்கள் கூட இருக்கலாம்; எனக்கு எந்த திட்டமும் இல்லை. நான் விரும்பும் வரை விளையாடலாம் என்பதே அணி நிர்வாகத்தின் நிலைப்பாடு. நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும் கூட, "கவலைப்படாதீர்கள், நீங்கள் விளையாடுங்கள்" என்றுதான் அவர்கள் சொல்வார்கள்.
இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். நான் முன்பு சொன்னதுபோல, இப்போது கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன். அடுத்த ஆண்டு தொடரலாமா வேண்டாமா என்பதை அடுத்த 8 மாதங்களில்தான் முடிவு செய்வேன்.”
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play