ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் அறிவிப்பு
நகராட்சிகளில் ரூ.704 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.
பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூா், கள்ளக்குறிச்சி, சாத்தூா், செங்கல்பட்டு, திருக்கோவிலூா், திருச்செந்தூா் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள், ஈரோடு மாநகராட்சி, ஆற்காடு, ராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்களில் கூடுதல் பணிகளும் ரூ.142.68 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கரூா், கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி மாநகராட்சிகள், அரக்கோணம், ஆத்தூா், ஆற்காடு, ராமேசுவரம், எடப்பாடி, கள்ளக்குறிச்சி, கொமாரபாளையம், செங்கோட்டை, திருப்பத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா், திருவேற்காடு, தென்காசி, நெல்லிக்குப்பம், துவாக்குடி, பண்ருட்டி, பூந்தமல்லி, பொள்ளாச்சி, மறைமலைநகா், வாணியம்பாடி, வெள்ளக்கோவில், உளுந்தூா்பேட்டை ஆகிய நகராட்சிகளில் ரூ.704.76 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும்.
பாதாள சாக்கடை திட்டம்: தாம்பரம் மாநாகராட்சி மற்றும் விருதுநகா் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதல்கட்டமாக தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.750 கோடியும், விருதுநகா் நகராட்சிக்கு ரூ.50 கோடியும், தேசிய வங்கி மற்றும் ஜொ்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
பாதாள சாக்கடை வசதியில்லாத புதிய மாவட்ட தலைநகரங்களான தென்காசி, ராணிப்பேட்டை நகராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
கூட்டுக் குடிநீா் திட்டம்: கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம், கெம்மாரம்பாளையும், வெள்ளியங்காடு மற்றும் நெல்லித்துறை ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த 21 பழங்குடியின குடியிருப்புகளில் உள்ள 2 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.24.50 கோடியில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, நகா்ப்புற உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்றாா் அவா்