ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!
இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று கேள்வி நேரத்தின்போது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன், "தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுவதில் சார்பதிவாளர் அலுவலங்களிலே சில தடைகள் இருக்கின்றன. குறிப்பாக பட்டியலினத்தவர் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளும்போது பல தடைகள் ஏற்படுகின்றன.
மேலும் இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி,
தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்வது குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருமணச் சான்றை பொருத்தவரை, அரசின் இணையதளப் பக்கத்தில் உரிய விவரங்களை நிரப்பி கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பம் உருவாக்கப்படும். அதன் அச்சுப்பிரதியை எடுத்து திருமணப் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
பின்னர் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நாள், நேரத்தினை முன்பதிவு செய்வதற்கு டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் திருத்தம் தேவைப்பட்டால் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரில் வராமல் இணையம் வழியாகவே சரிசெய்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
திருமணச் சான்றுக்கு இணையதளப் பக்கத்தில் விவரங்களை உள்ளீடு செய்து கட்டணம் செலுத்திய பின்னர் நாள், நேரத்திற்கான டோக்கன் பெற்று சரிபார்ப்புக்கு மட்டும் சார்பவதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது.