MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருகின்றன.
அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக - பாஜக கூட்டணி, 2023 செப்டம்பரில் கருத்து வேறுபாடுகள் காரணமாக உடைந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நாள்களுக்கு முன்பு தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார். எஸ்.பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அமித் ஷாவும் அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார்.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருதாகவே தெரிகிறது.
தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகி நயினார் நாகேந்திரன் ஆகியோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இபிஎஸ்ஸைத் தொடர்ந்து செங்கோட்டையனின் தில்லி பயணமும் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு பேரவையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இபிஎஸ் பேசியதன் மூலமாக இந்த மோதல் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிமுகவைப் பொருத்தவரை பிரிந்த சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இபிஎஸ் vs செங்கோட்டையன்! அதிமுகவில் என்ன நடக்கிறது?