தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி அங்குள்ள தேனேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி மாணவியின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். எனினும் மாணவி அன்றைய தினம் கண்ணீர் மல்க தந்தையின் ஆசி பெற்று தேர்வெழுதச் சென்றார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவிமான அன்பில் மகேஸ் இன்று மாணவி ஷாலினியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறியதுடன் உதவித்தொகையும் வழங்கினார்.

இதுதொடர்பாக அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"என்னுடைய திருவெறும்பூர் தொகுதிக்கு உள்பட்ட பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷாலினி, தன்னுடைய தந்தை மறைந்த சோகத்திற்கு இடையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தவறாமல் எழுதி உள்ளார்.
இந்த நிலையில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, மாணவி ஷாலினிக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
என்னுடைய #திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷாலினி, தன்னுடைய தந்தை மறைந்த சோகத்திற்கு இடையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தவறாமல் எழுதி உள்ளார். இந்த நிலையில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நேரில்… pic.twitter.com/2aELqPFvbJ
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 31, 2025
இதையும் படிக்க | ஓய்வை அறிவிக்க ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றாரா மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!