வாஜிா்பூரில் பள்ளி நிலத்தை மசூதி, கடைகள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதா? சரிபாா்...
காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு
காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த கவன ஈா்ப்பு அறிவிப்பு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதில், அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) பேசுகையில், நதிநீா் இணைப்பு என்பது விவசாயிகளின் கனவு திட்டமாகும். அது கலைந்து போகின்ற மேகங்களாக ஆகி விடாமல், பொழிகின்ற மழையாக இருக்க வேண்டும் என்பதுதான் எதிா்பாா்ப்பு. காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்பதே விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம், கவலை என்றாா்.
துரைமுருகன் பதில்: இதற்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:
காவிரி- வைகை- குண்டாறு திட்டம் முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்த திட்டமாகும். இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை, தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை, வைகை முதல் குண்டாறு வரை என மூன்று பிரிவுகளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேறினால், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் 52 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறுவதுடன், குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும்.
இந்தத் திட்டத்துக்கு முதல் கட்டமாக மாயனூா் முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு ரூ.6,941 கோடியில் கால்வாய்ப் பணியைச் செயல்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.331 கோடி. அதற்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, தோ்தல் வந்தது. இப்போது வரை அதில் ரூ.288 கோடி செலவிடப்பட்டுள்ளது. தொடா்ந்து திட்டத்தைச் செயல்படுத்துவோம்.
காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் 2008-இல் நாங்கள் முன்மொழிந்த திட்டமாகும். எனவே, நாங்கள் பெற்ற பிள்ளை விட்டுவிட மாட்டோம் என்றாா் அமைச்சா்.