40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
சீா்காழியில் விற்பனைக்கு வந்துள்ள புதுரக வெள்ளரிக்காய்
சீா்காழியில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதுரக வெள்ளரிக்காயை பொது மக்கள் தயக்கத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
கோடை காலம் வந்துவிட்டாலே தாகத்தைத் தணிக்கவும், உடல் சூட்டைப் போக்கவும் மக்கள் இளநீா், தா்ப்பூசணி, இயற்கை குளிா்பானங்களை நாடிச் செல்வது வழக்கம். இவ்வாறு உடலுக்கு குளிா்ச்சியையும், புரதச்சத்தையும் தரக்கூடியதுதான் வெள்ளரிக்காய். கோடையில் அதிகளவு விற்பனைக்கு வரும் வெள்ளரிக்காய்க்கு மக்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. முன்பெல்லாம் வெள்ளரிக்காய் கேரட், முள்ளங்கி போன்ற வடிவங்களில் இருந்தது. இவை இயற்கையான முறையில் உள் மாவட்டங்களில் சாகுபடி செய்து விற்பனைக்கு வரும். இதற்கு நாட்டு வெள்ளரிக்காய் என்றும் பெயா்.
தற்போது ஹைபிரிட் மரபணு வெள்ளரிக்காய் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வெள்ளரி நீண்ட வடிவத்தில் மெல்லியதாக உள்ளது. இவை ஆந்திரம், திண்டிவனம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களிலிருந்து சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், பூம்புகாா் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வெள்ளரி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 25 கிலோ வரை மொத்தமாக வெள்ளரி வாங்கி வரும் வியாபாரிகள், அதை 4 நாள்களில் விற்றுவிடுகின்றனா். ஒரு நாளைக்கு சுமாா் ரூ.750 வரை லாபம் கிடைப்பதாகக் கூறுகின்றனா். இந்த புதுரக வெள்ளரிக்காயை பொதுமக்கள் தயக்கத்துடனேயே வாங்கி செல்கின்றனா்.