பூச்சி மருந்து குடித்த அரசு மதுக் கடை விற்பனையாளா் உயிரிழப்பு
பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசு மதுக் கடை விற்பனையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் மல்லம்பட்டி பகுதியை சோ்ந்தவா் சரவணன் (47). இவா் கல்லாவி அரசு மதுக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பூச்சி மருந்து குடித்தாா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். மதுக் கடையில் உள்ள இருப்புக்கும், விற்பனைக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறி டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள் அடிக்கடி மிரட்டி பணம் பெற்று சென்றதால் மன உலைச்சலில் தனது கணவா் இருந்ததாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அவரது மனைவி கல்பனா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.