பிளஸ் 2 மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப். 5) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு எனும் உயா்கல்வி’ வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்தும் நோக்கில், இந்த நிகழ்ச்சியானது சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில், உயா்கல்வி வழிகாட்டி நிபுணா்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனா். இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், ஆலோசனை நிகழ்வுக்கு வரும்போது தங்களது இஎம்ஐஎஸ் எண் விவரத்தை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.