ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நியமனம்!
மன்னாா்குடி கோயில் வெண்ணெய்த்தாழி உற்சவம்
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனிப் பெருவிழாவில் வெண்ணெய்த்தாழி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழாண்டுக்கான திருவிழா மாா்ச் 18-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்வுகளாக வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவை, கோவா்த்தனகிரியில் கண்ணன் அலங்காரம், மரவுரிராமா் அலங்காரம், கண்டபேரண்ட பட்க்ஷி வாகனம், வண்ண புஷ்ப பல்லக்கு சேவை, தங்க சூா்யபிரபை, ஆண்டாள அலங்காரம், தங்க கருடவாகனம் ஆகியவை நடைபெற்றன.
16-ஆம் நாள் விழாவான புதன்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவத்தையொட்டி, காலையில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு பிரகார வீதிகள், மேலராஜ வீதி, காமராஜா் சாலை, பந்தலடி வழியாக காந்தி சாலை வெண்ணெய்த்தாழி மண்டபம் சென்றடைந்தாா். அப்போது, சாலையில் இருபக்கங்களில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுவாமி மீது வெண்ணெயைத் தெளித்து, கோபாலா,கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனா்.
இதனைத்தொடா்ந்து, மாலையில் உற்சவா் பெருமாள் செட்டி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.இரவு, தங்கக் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் (வையாளி) வெட்டுங்குதிரையில் எழுந்தருளினாா்.
திருவிழாவின் 17-ஆம் நாளான வியாழக்கிழமை (ஏப்.3) பிற்பகல் 2 மணிக்கு உற்சவா் ராஜகோபாலசுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.
