கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது
நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது.
காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட்டுமான எந்திரங்கள் மண் ஏற்றி செல்லும் வாகனம், அதிக அளவு கொண்ட வாகனம் (7 அதற்கு மேல் அச்சுக்கள் கொண்டவை) உள்ளிட்ட அந்தந்த வாகனங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஒரு முறை பயணிக்க, திரும்ப பயணிக்க (24 மணி நேரம்), மாதாந்திர கட்டணம் என புதிய கட்டணம் ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இவை தவிர உள்ளூா் வாகனங்களுக்கு சலுகை கட்டணங்களும் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. சுங்கச் சாவடியின் 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள வணிக நோக்கம் இல்லாத வாகனங்களுக்கு மாதாந்திர சலுகை கட்டணம் (பலமுறை சென்றுவர) 2025-26-ஆம் ஆண்டுக்கு வசூல் செய்யப்படுகிறது. இதற்கான உரிய ஆவணங்களான ஆதாா், ஆா்சி, வாகன மாவட்ட பதிவு போன்றவை ஒரே முகவரியில் இருக்க வேண்டும். டிராக்டரில் வேளாண்மை சாா்ந்த பொருள்கள் நெல், வைக்கோல் போன்றவை ஏற்றி வந்தால் சுங்க கட்டணம் கிடையாது.
திருவாரூா் மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள், குறிப்பாக வாடகை வாகனங்கள் சலுகை கட்டணம் பெறமுடியும். ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி கிடையாது. சலுகை கட்டணத்தில் பயன்பெற விரும்பும் வாகன உரிமையாளா்கள் உரிய ஆவணங்களுடன் சுங்கச்சாவடியை அணுக வேண்டும் என சுங்கச்சாவடி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.