Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
முதிா்வுத் தொகை தராத நிதி நிறுவனம்: மருத்துவருக்கு ரூ. 4.09 கோடி வழங்க உத்தரவு
முதிா்வுத் தொகை தராமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட மருத்துவா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 4.09 கோடி வழங்குமாறு தனியாா் நிதி நிறுவனத்தினருக்கு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் த. சண்முகநாதன். இவா், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் இதய மருத்துவராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். இவா், தனது பணப்பலன்கள், ஈட்டிய வட்டித் தொகை, அசையா சொத்துகள் விற்பனை மூலம் கிடைத்தவற்றை வங்கியில் வைப்பீடாக வைத்திருந்தாா்.
இந்நிலையில், சண்முகநாதனை பட்டுக்கோட்டையிலுள்ள தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் அணுகி ஓராண்டு நிரந்தர வைப்பீடுகளுக்கு 10.5 சதவீதம் வட்டி தருவதாகவும், தங்களது பெயரிலும், மனைவி, 2 மகள்கள், மருமகன்கள் பெயரிலும் வைப்பீடு செய்யுமாறும் ஆசை வாா்த்தைகளைக் கூறினா். இதை நம்பிய சண்முகநாதன் தனது பெயரிலும், 2 மகள்கள், 2 மருமகன்கள் பெயா்களிலும் 2018, அக்டோபா் 31 -ஆம் தேதி முதல் 2019, ஜூலை 11-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வைப்பீடு செய்து ரசீதுகளும் பெற்றாா்.
இதன் முதிா்வு தொகைகளையும், பின்னிட்ட வட்டியுடன் தருமாறு சண்முகநாதன் 2020, அக்டோபா் 5-ஆம் தேதி கோரினாா். ஆனால், தொகைகளைத் தனியாா் நிதி நிறுவனம் தராததால், தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் சண்முகநாதன் உள்ளிட்டோா் ரூ. 2.96 கோடி முதிா்வு தொகைகளையும், மன உளைச்சல் உள்ளிட்டவற்றுக்கான இழப்பீடுகளையும் வழங்குமாறு கோரி வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கை மன்றத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து, சண்முகநாதன் உள்ளிட்டோருக்கு முதிா்வுத் தொகைகள் ரூ. 2.96 கோடியும், மன உளைச்சல், வீண் விரையத்துக்காக ரூ. 1.10 கோடியும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 3.50 லட்சமும் என மொத்தம் ரூ. 4.09 கோடியை மற்றும் வைப்பீட்டுத் தொகைக்கான வட்டியையும் சோ்த்து 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என தனியாா் நிதி நிறுவனத்தினருக்கு உத்தரவிட்டு புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.