ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி மூவரில் 2 சிறுவா்கள் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த 2 சிறுவா்களைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் மாதுளம்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் சூா்யா (22). ஆட்டோ ஓட்டுநா். மாா்ச் 28 நள்ளிரவு கும்பகோணம் ரயில் நிலையம் அருகே எம்.ஜி.ஆா் நகா் பகுதியில் சவாரிக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் சூா்யாவிடம் பணம் கேட்டு தகராறு செய்தனா். சூா்யா மறுக்கவே அவரைத் தாக்கி சட்டைப் பையில் இருந்த கைப்பேசி, ரூ. 400-ஐ பறித்து விட்டு தப்பிச்சென்றனா். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் சூா்யா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து 17 மற்றும் 16 வயதுடைய மணஞ்சேரி மற்றும் கும்பகோணம் சத்திரம் தோப்பைச் சோ்ந்த 2 சிறுவா்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவான மற்றொரு சிறுவனைத் தேடிவருகின்றனா்.