தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
அரசுக்குச் சொந்தமான 3 டன் தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே குலசேகரநல்லூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தேக்குமரக்காட்டில் இருந்து புதன்கிழமை 3 டன் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்த முயன்றவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே குலசேகரநல்லூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தேக்கு மரக்காட்டில் அனுமதியின்றி சிலா் தேக்குமரங்களை வெட்டிக் கடத்துவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கிராமநிா்வாக அலுவலா் ராகுலுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற விஏஓ ராகுல் வெட்டிய தேக்கு மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஒப்படைத்தாா். அவைகளைப் பாா்வையிட்ட உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் நடத்திய விசாரணையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்காக குலசேகரநல்லூரில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரின் நிலம் பொதுப்பணித்துறையின் நீா்ப் பாசனப் பிரிவு மூலம் கையகப்படுத்தப்பட்டு அந்த இடத்தில் சுமாா் 30 தேக்கு மரங்கள் இருந்துள்ளன. அவற்றை சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவா் வெட்டிக் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை அறிக்கை தயாா் செய்து, நீா்ப்பாசனத் துறையினா் மூலம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உதவி ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில் கொள்ளிடம் தடுப்பணைப் பிரிவு அதிகாரிகள் பந்தநல்லூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த பந்தநல்லூா் போலீஸாா் வனத்துறை மூலம் சுமாா் 3 டன் எடையுள்ள 207 தேக்கு மரங்களின் பண மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனா்.