26 Years of Padaiyappa: கமல் சொன்ன யோசனை; பேசாமல் சென்ற ரஜினி - ரவிக்குமார் பகிர...
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப்ரல் 9ல் அனைத்துக் கட்சிக் கூட்டம் - மு.க. ஸ்டாலின்
சென்னை: தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இது குறித்து விவாதிக்க ஏப்ரல் 9ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு மசோதா குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழிக அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
நீட் தேர்வுக்கு, தமிழகத்தில் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டிருப்பதாக பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மருத்துவத் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்வதற்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைதான் அடிப்படைக் காரணம்.
கடந்த 2006ஆம் ஆண்டு தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாகும் வகையில், அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவர்களும் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நீட் தேர்வு முறை, சிறப்புப் பயிற்சிக்குச் சென்று பயிற்சி பெற இயலாத மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறியது.
இதனை எதிர்த்து, சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பினோம், அதனை திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து மீண்டும் பேரவையில் நிறைவேற்றி அனுப்பியிருந்த நிலையில், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்து மத்திய அமைச்சக்ங்கள் தரப்பில் கோரப்பட்ட விளக்கங்களும் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசு, மசோதாவை நிராகரித்துவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்துள்ள மத்யித அரசு எதேச்சதிகார போக்கு அரசமைப்புச் சட்டம் சந்தித்துள்ள கூட்டாட்சி வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.
நமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சட்டப் போராட்டம் தொடரும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
மேலும், இது குறித்து விவாதிக்க அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களிடமும் ஒரு ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கிறது. அனைத்துக் கட்சியினரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் சார்பாக தமிழக அரசு உறுதியோடு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.