நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!
விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு - விவசாயிகள் மகிழ்ச்சி!
புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். இதன்மூலம், அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது. அதனடிப்படையில் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு மூலம் தயாரிப்புகளுக்கு சட்டப் பாதுகாப்பு, அங்கீகாரம் பெறாத மற்றவர்கள் புவிசார் குறியீடு தயாரிப்புகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கிறது.

இது நுகர்வோர் விரும்பிய பண்புகளின் தரமான தயாரிப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் புவிசார் குறியீடு பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார செழுமையை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் தற்போது, இந்த சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இனிமேல், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் விருதுநகர் சம்பா வத்தலுக்கு அதிக விலை கிடைக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், `விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 3042 ஏக்கர் பரப்பளவில் சம்பா வத்தல் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. மிளகாய் ஒரு பணப்பயிர். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சம்பா வத்தல் மற்ற மிளகாயை விட அதிக காரத்தன்மை (‘காப்சைசின்) அளவு 0.24 சதவிகிதம் கொண்டது மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும். சம்பா வத்தல் நீளம் 6 - 6.5 செ.மீ நீளமுடையதாகவும், கூர் முனை கொண்டதாகவும் இருக்கும். அதிக காரத்தன்மை கொண்ட சம்பா வத்தல் மதிப்புக்கூட்டு பொருட்களான ஒலியோரெசின் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, விருதுநகர் சம்பா வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது போல விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, இராஜபாளையம் மாம்பழம், தாதம்பட்டி கொடுக்காப்புளி மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழம் ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு வாங்கும் பணி நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மிளகாய் வத்தல் விவசாயி முத்துசாமி தெரிவிக்கையில், "விருதுநகர் சம்பா மிளகாய் வத்தல் தனித்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக புவிசார் குறியீடு வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வணிகத்திற்கும், ஏற்றுமதிக்கும் உதவியாக இருக்கும். இது வத்தல் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் உள்ளது" என்றார்.