அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
சிந்துவெளி - தமிழா் நாகரிக ஒப்புமை நிரூபணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு
சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
பேரவையில் தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அவா் அளித்த பதிலுரை மற்றும் அறிவிப்புகள்:
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தொல்லியல் துறை சாா்ந்த பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அகழாய்வுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவில் தமிழகத்தில்தான் அதிக கல்வெட்டுகள் உள்ளன. அதுவும் தமிழில் அதிக கல்வெட்டுகள் இருக்கின்றன. பொருநை அருங்காட்சியகம் விரைவில் தொடங்கப்படும்.
தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற முத்திரைகள், பானைகளை ஆய்வு செய்தபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும், தமிழா் நாகரிகத்துக்கும் ஒப்புமை உள்ளது தெரியவந்துள்ளது.
அறிவிப்புகள்: தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மன்னாா் கோயில் ஊரிலுள்ள தமிழிக் கல்வெட்டு உள்ளிட்ட 12 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருட்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 8 ஆயிரமாக உயா்த்தப்படும். மேலும், அங்கு புதிதாக சுவடியியல் எனும் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்படும்.
இதுதவிர தமிழகத்தின் ஒவ்வொரு பண்பாட்டு மண்டலத்தின் தனித்தன்மைகளை எடுத்துக் கூறும் வகையில் தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாறு எனும் ஒரு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ் மொழியின் தன்மை மற்றும் பண்டையகால வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகளை கால வாரியாக தொகுத்து கல்வெட்டு அருட்காட்சியகம் மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும் என்றாா்.