மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
560 கிலோ தங்கம், ரூ.4000 கோடி அரண்மனை வாழ்க்கை; இருந்தும் செயலி முலம் காய்கறி வியாபாரம் - யார் இவர்?
இந்தியாவில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் பெயருக்கு சில இடங்களில் மன்னர்கள், இளவரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றாலும், கெளரவத்திற்காக அந்த பதவியில் அவர்கள் இருக்கின்றனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரும் தற்போது மத்திய அமைச்சராக இருப்பவருமான ஜோதிராதித்யா சிந்தியாவும் அரச பரம்பரம்பையில் வந்தவர்தான். அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்தார். ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.கவில் சேர்ந்து இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார்.
அவரது மகன் மகாஆர்யமான் சிந்தியா தனது தந்தைக்கு உதவியாக தனது 13 வயதில் இருந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். குவாலியர் இளவரசராக பார்க்கப்படும் மகாஆர்யமான் சிந்தியா, தனது அரச பாரம்பர்யத்தை தாண்டி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

செயலி மூலம் காய்கறி விற்பனை
அதற்காக தனது நண்பர் சூர்யன்ஸ் ரானா என்பவருடன் சேர்ந்து ஆன்லைன் மூலம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் மொபைல் செயலி ஒன்றை தொடங்கி இருக்கிறார். அரச குடும்பத்தில் பிறந்து காய்கறி வியாபாரம் செய்வதாக சிலர் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அந்த விமர்சனங்களைப்பற்றி கவலைப்படாமல் தனது தொழிலை விரிவுபடுத்தும் வேலையில் ஆர்யமான் தீவிரமாக இருக்கிறார்.
மைமண்டி என்ற பெயரில் தொடங்கி இருக்கும் இந்த மொபைல் செயலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. காலையிலேயே மகாஆர்யமான் தனது முகத்தை மறைத்துக்கொண்டு காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக வாங்கி வந்து தனது மொபைல் செயலியில் வரும் ஆர்டர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் அவர் இந்திய சந்தையை அறிந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
முதலீடு செய்த ரத்தன் டாடா
விவசாயிகளிடமும் தொடர்பு வைத்திருக்கும் சிந்தியா அவர்களிடமிருந்து நேரடியாகவும் காய்கறிகளை விலைக்கு வாங்குகிறார். தற்போது இந்த மொபைல் செயலி 5 நகரங்களில் செயல்படுகிறது. மகாஆர்யமான் சிந்தியாவின் செயல்பாடுகளை பார்த்து ரத்தன் டாடாவே அவரது கம்பெனியில் முதலீடு செய்துள்ளார். தற்போது மைமண்டியின் சந்தை மதிப்பு ரூ.150 கோடியாகும்.
இதுவரை சிந்தியா மூன்று முறை தனது கம்பெனிக்கு வெளியில் இருந்து நிதி திரட்டி இருக்கிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான இளவரசர் சிந்தியா தற்போது 150 ஆண்டுகள் பழமையான ஜெய் விலாஸ் அரண்மனையில் வசிக்கிறார்.

ஜெய் விலாஸ் அரண்மனை
1874-ம் ஆண்டு இந்த அரண்மனை ஒரு கோடி ரூபாயில் கட்டப்பட்டது ஆகும். இதில் 400 அறைகள் இருக்கிறது. அரண்மனையின் இன்றைய மதிப்பு ரூ.4,000 கோடியாகும். அரண்மனையின் உள்பகுதி 560 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை கொண்டு அரண்மனையின் உள்பகுதியை அலங்கரிக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும், அதற்கு அப்போது ஒரு கோடி செலவானதாகவும் கூறப்படுகிறது.
அரண்மனையில் இருக்கும் தர்பார் ஹாலின் மையப்பகுதியில் இருக்கும் அலங்கார விளக்கு மிகவும் பிரபலம் ஆகும். இது உலகத்திலேயே மிகப்பெரிய விளக்காக பார்க்கப்படுகிறது.
இந்த விளக்கை பார்ப்பதற்கென்றே அதிகமானோர் வந்து செல்கின்றனர். அரண்மனையின் சாப்பாட்டு அறை மிகவும் அழகாக வடிவமைக்கபட்ட ஒன்று. சாப்பாடுகளை எடுத்துச்செல்ல சிறிய ரயில் ஒன்று உள்ளே வலம் வருகிறது. இந்த அளவுக்கு ஆடம்பரமான பங்களாவில் வாழ்ந்தாலும் தனக்கென தனி தொழில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மகாஆர்யமான், செயலி மூலம் சொந்தமாக காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.