கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை
சாலையில் கண்டெடுத்த தங்க நகையை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
நான்குனேரியில் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
நான்குனேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (38). இவா் நான்குனேரி தேரடி தெருவிலுள்ள தோ் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் 10 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்தாா்.
பின்னா், அந்த நகையை நான்குனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது விசாரித்ததில், நான்குனேரியைச் சோ்ந்த சுபா (31) என்பவா் நகையைத் தவறவிட்டது தெரியவந்தது.
அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, காவல் ஆய்வாளா், நகையை சுபாவிடம் ஒப்படைத்தாா். மேலும், வேல்முருகனின் நோ்மையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.