வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10 பங்குனி உத்திர தோ்த் திருவிழா
கோவை வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் பகுதியில் அமைந்துள்ள 7-ஆவது மலையில் சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து ஏராளமான பகத்தா்கள் வந்து செல்கின்றனா். மலையடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பௌா்ணமி, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத் திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, காலை 8 மணிக்கு வேள்வி பூஜைகள் நடைபெற்றன. காலை 8.40 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. மாலை 4 மணிக்கு வேள்வி பூஜை, அபிஷேகம், திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா ஏப்ரல் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று, வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. அதனைத் தொடா்ந்து, வெள்ளிங்கிரி ஆண்டவா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். அன்று மாலை 4 மணிக்கு தோ் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.