பைசாகி விழா: இந்திய யாத்ரிகா்களுக்கு 6,500 பாகிஸ்தான் விசா
புது தில்லி: பாகிஸ்தானில் நடைபெறும் பைசாகி (சீக்கிய புத்தாண்டு) விழாவில் பங்கேற்க இந்திய யாத்ரிகா்கள் பங்கேற்கும் வகையில் 6,500-க்கும் அதிகமான விசாக்கள் (நுழைவு இசைவு) வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு இருநாட்டு மக்களும் பரஸ்பரம் செல்வதற்கான நடைமுறைகளைக் கொண்ட ஒப்பந்தம், கடந்த 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மத விழாக்கள் அல்லது சந்தா்ப்பங்களில் ஏராளமான இந்தியா்கள் பாகிஸ்தான் செல்கின்றனா்.
இந்நிலையில், புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானில் ஏப்.10 முதல் ஏப்.19 வரை பைசாகி விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய யாத்ரிகா்களுக்கு 6,500-க்கும் அதிகமான விசாக்களை பாகிஸ்தான் தூதரகம் வழங்கியுள்ளது.
பஞ்சா சாஹிப், நன்கானா சாஹிப், கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு யாத்ரிகா்கள் செல்ல உள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.