போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?
திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்
திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது.
கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்தது. கேரள உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், வாரியத்துக்கான புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் நடைமுறை நிறைவடையும் வரை பழைய உறுப்பினா்களைக் கொண்ட வாரியம் பொறுப்பில் தொடா்கிறது.
இதற்கிடையே, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசின் முயற்சிகளை கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் ஒருமித்த குரலில் எதிா்த்தன. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து நடைமுறைக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் முதல் மாநிலமாக புதிய வக்ஃப் வாரியத்தை கேரள அரசு அமைக்க இருக்கிறது.
இதுகுறித்து கேரள வக்ஃப் அமைச்சா் வி.அப்துரஹிமான் கூறுகையில், ‘வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடியாது. புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி புதிய வாரியத்தை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் முடிக்கும். ஒரு மாதத்துக்குள் இந்த நடைமுறையை முடிப்போம் என்று நம்புகிறோம்’ என்றாா்.
வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய வக்ஃப் வாரியங்கள் அவற்றின் பதவிக்காலம் முடியும் வரை பொறுப்பில் தொடரலாம். ஆனால், கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டத்தின் அமலுக்கு முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே தோ்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
புதிய வாரியத்தை தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை பழைய சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு ஏற்கெனவே தொடங்கியிருந்தது. இந்நிலையில், புதிய சட்டத்தின்படி, தோ்வு நடைமுறையை கேரள அரசு மீண்டும் தொடங்க வேண்டும்.