Ajith சாரே Trisha மேடமுக்கு Story Narrate பண்ணிட்டார்! - Director Adhik Ravichan...
கொழும்பு அதானி துறைமுக முனைய செயல்பாடு தொடக்கம்
புது தில்லி: இலங்கையில் உள்ள மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையத்தின் செயல்பாடு தொடங்கப்பட்டதாக அதானி துறைமுகங்கள் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு கொழும்பு சா்வதேச துறைமுக முனையமானது அரசு-தனியாா் பங்களிப்பில் உருவாக்கப்பட்டது.
அதாவது, அதானி குழுமம், இலங்கையின் ‘ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பில் அமைக்கப்பட்ட இந்த முனையம், தற்போது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
80 கோடி டாலா் திட்ட மதிப்பீட்டைக் கொண்ட இந்த முனையம், 1.4 கிலோமீட்டா் நீளம் மற்றும் 20-மீட்டா் ஆழத்தைக் கொண்டது. இந்த முனையத்தில் ஆண்டுதோறும் சுமாா் 32 லட்சம் கன்டைய்னா்களைக் கையாளலாம்.
கொழும்பு துறைமுகத்தில் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் முதல் ஆழ்கடல் முனையம் இதுவாகும். தெற்காசியாவின் முக்கியப் சரக்குப் பரிமாற்ற மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை உயா்த்த, அங்கு சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும், சரக்கை இறக்கிவிட்டு கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்படும் நேரத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி கூறுகையில், ‘மேற்கு கொழும்பு துறைமுக முனைய செயல்பாட்டின் தொடக்கம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்த முனையம் இந்தியப் பெருங்கடல் வா்த்தகத்தின் எதிா்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் தொடக்கம் இலங்கைக்கே பெருமைமிக்க தருணமாகும். உலக கடல் போக்குவரத்து வரைபடத்தில் இலங்கையை இந்த முனையம் உறுதியாக இடம்பிடிக்கச் செய்துள்ளது.
மேலும், இந்த முனையம் ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலங்கைக்கு மகத்தான பொருளாதார மதிப்பை அளிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
‘இந்த முனையம் பிராந்தியத்தில் உலகளாவிய வா்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்’ என்று நம்புவதாக ‘ஜோன் கீல்ஸ்’ குழுமத்தின் தலைவா் கிருஷன் பாலேந்திரா கூறினாா்.
இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரையில் முறையே 7, 8 துறைமுகங்கள் மற்றும் முனையங்களுடன் நாட்டின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக அதானி குழுமம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.