காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசை கண்டித்த ராமதாஸ்!
மத்திய அரசு சமையல் எரிவாயுவின் விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது நாடு முழுவதும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
விலையேற்றத்தின்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 503லிருந்து ரூ.553-ஆகவும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத பொதுப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 803-லிருந்து ரூ. 853-ஆகவும் விலை உயரும்.

இந்த விலை உயர்வுக்கு எதிராக, கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைக்கும் லாபத்தை மக்களுக்கு அளிக்காமல் அரசே எடுத்துக்கொள்வது தவறு எனக் குரலெழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்
ராமதாஸின் பதிவில், "சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்; உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 818.50 லிருந்து ரூ.868.50 ஆக அதிகரித்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் குறையக்கூடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல.
மக்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசே எடுத்துக்கொள்வதா?
அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விற்பனையின் லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை நுகர்வோருக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக் கொண்டதும் தவறு ஆகும்.

எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை. அவை மக்களைச் சுரண்டக் கூடாது. அதேபோல், மத்திய அரசும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக் குறைப்பு நன்மையை தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், கலால்வரி உயர்வை திரும்பப் பெறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது ரூ.2 குறைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
