வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பேரவையில் முதல்வர் பேசுகையில், “பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்த பல முக்கிய சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் அவர் திருப்பி அனுப்பினார்.
அதனை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். 2 முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்து இருந்தபோதிலும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சட்ட விரோதமானது என்றும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருத வேண்டும் என்றும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.” என்றார்.
இதையும் படிக்க: தமிழக மசோதாக்களுக்கு ஒப்புதல்: சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு