பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை
மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது.
மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், மதுரை மத்தியச் சிறையில் பணிபுரியும் அதிகாரிகளின் குடியிருப்புகளில் உள்ள குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிக்காக, சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளை பயன்படுத்திய விடியோ காட்சிகள் வெளியாகி சா்ச்சை எழுந்துள்ளது. விடியோவில், கடந்த ஏப். 13- ஆம் தேதி, சிறைவாசிகள் மூவரை பயன்படுத்தி, சிறைத் துறை அதிகாரி குடியிருப்பில் உள்ள குடிநீா் தொட்டிகளை சுத்தம் செய்வது போன்ற காட்சியும், அந்த சிறைவாசிகள் பீடி புகைத்தவாறு பணியில் ஈடுபடுவதும் பதிவாகியுள்ளது. சிறைவாசிகளை அதிகாரிகள் தங்களின் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவு உள்ள நிலையில், சிறைவாசிகளை தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தியது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறைவாசிகளுக்கு பீடி எப்படி கிடைத்தது என்ற சந்தேகமும் எழுந்தது.
இதுதொடா்பாக சிறைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியதாவது:
சிறைத் துறை அதிகாரிகளின் சொந்தப் பணிகளுக்கு சிறைவாசிகளை பயன்படுத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பதால், தனிப்பட்ட பணிகளுக்கு அவா்களை பயன்படுத்துவது இல்லை. தற்போது வெளியாகி உள்ள விடியோ காட்சிகளில் உள்ள நபா்கள் சிறைவாசிகள் தானா? என விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் இந்த விடியோ தற்போது எடுக்கப்பட்டதா அல்லது பழைய விடியோ காட்சியா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றனா்.