போக்சோ வழக்கில் வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வியாபாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் முருகேசன் (63). கோரை பாய் வியாபாரம் செய்து வரும் இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.