மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!
மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த நூா்முகம்மது இஸ்மாயில் (22), இவரது உறவினா் முஹமது தாரிக் (26) ஆகியோா் கடந்த பிப். 13 -ஆம் தேதி மலேசியாவுக்கு சுற்றுலா சென்றனா். சில நாள்களுக்கு முன்பு, நூருல் முகம்மது இஸ்மாயிலின் சகோதரரிடம், கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், அவா்கள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாகவும், இருவரையும் விடுவிக்க வேண்டுமெனில், ரூ. 26 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், பணத்தை தராவிட்டால் இருவரது உடலில் உள்ள கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்து விற்பனை செய்து விடுவதாகவும் மிரட்டினா்.
இதனால் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்த அவா்களது குடும்பத்தினா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்தை சனிக்கிழமை நேரில் சந்தித்து, இளைஞா்கள் இருவரையும் மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனா்.